133. வேள் ஆய் அண்டிரன்

     ஆய் அண்டிரனைக் கண்டு அவன் புகழ்பாடி மிக்க களிற்றுப் பரிசு
பெற்றேகும் விறலி யொருத்தி, அவன் பெயரைக் கேட்ட வளவன்றி நேரிற்
கண்டறியாத வேறொரு விறலியைக் கண்டு, அவளது அறியாமைக் கிரங்கி,
“விறலி நீ ஆய் அண்டிரனைக் கண்ணிற் கண்டதில்லை. காண
விரும்பினையாயின் இப்பொழுதே நின் கொண்டைமேற் காற்றடிக்க
மயில்போல் கவினுற நடந்து சென்று அவனைக் காண்பாயாக” என
விறலியாற்றுப்படை வாயிலாக இவனது புகழை முடமோசியார் இப் பாட்டில்
மொழிந்துள்ளார்.

 மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற்
கேட்பி னல்லது காண்பறி யலையே
காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின்
விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக்
5 கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி
 மாரி யன்ன வண்மைத்
தேர்வே ளாயைக் காணிய சென்மே.
 (133)

     திணை : அது. துறை : விறலியாற்றுப்படை. அவனை அவர்
பாடியது.

    உரை : மெல்லியல் விறலி - மெல்லிய இயல்பினையுடைய
விறலி; நீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது - நீ நல்ல புகழைச்
செவியாற் கேட்பினல்லது; காண்பறியலை - அவன் வடிவைக்
காண்டலறியாய்; காண்டல் வேண்டினை யாயின் - காண்டலை
விரும்பினாயாயின்; மாண்ட நின் விரைவளர் கூந்தல் வரைவளி
உளர - மாட்சிமைப்பட்ட நினது மணம் வளரும் கூந்தலிலே
வரையிடத்துக்காற்று வந்தசைப்ப; கலவ மஞ்ஞையிற் காண்வர
இயலி - பீலியையுடைய மயில்போலக் காட்சியுண்டாக நடந்து;

மாரி அன்ன வண்மைத் தேர் வேள் ஆயை - மழைபோன்ற
வண்மையையுடைய தேரினையுடைய வேள் ஆயை; காணிய
சென்மே - காணச் செல்வாயாக எ-று.

     “விரைவளர் கூந்தல் வரைவளி யுளர” வென்றது, “கொண்டை மேற்
காற்றடிக்க” என்றதொரு வழக்குப்பற்றி நின்றது. என்றதனாற்
பயன்,பிறிதொன்றால் இடையூறில்லை யென்பதாம். ஆய் மாரி யன்ன
வண்மையனாதலின் விறலியை அம் மாரியைக் கண்ட மயில்போலக்
களித்துச் செல் லென்றவாறாம். யாழ நின்றென்று பாடமோதுவாரு முளர்.

      விளக்கம் :மாண்ட நின் என்புழி, யாழ நின் என்றும்
பாடமுண்டென உரைகாரர் கூறுகின்றார். யாழ வென்பது அசைநிலை.
ஆயது புகழ் கூறக்கேட்ட மாத்திரையே காண்டல் வேட்கை மிக்கு
மெலிவுற்று நின்றமை தோன்ற, “மெல்லியல் விறலி” யென்றார்.
வளியுளரப்பட்ட கூந்தல் மயிற்றோகைபோல் விளங்குதலால், மயில்போற்
செல்க என்றார். “கொடிச்சி கூந்தல் போலத் தோகை யருஞ்சிறை
விரிக்கும்” (ஐங். 300) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஆயின்
கொடையை மாரியன்ன வண்மை யென்றது, பயனோக்காது வேண்டுமிடத்து
நீரைச் சொரியும் மாரிபோல, ஆய்அண்டிரனும் இரப்பார்க் கீதல் தன்
கடனெனக் கருதி யொழுகினா னென்பது வற்புறுத்தி நின்றது. “இம்மைச்
செய்தது மறுமைக்காமெனும், அறவிலை வணிகன் ஆயலன்” (புறம். 134)
என்று பிறாண்டும் இவ்வாசிரியர் கூறுதல் காண்க.