73. சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளிக்கும் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளிக்கும் பகைமை யுண்டாயிற்று. நெடுங்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சி புரிந்து வந்தான். பகைமை மிக்குறவே நெடுங்கிள்ளி, இந் நலங்கிள்ளியை இகழ்ந்து போர்க் கெழுதற்குரிய சினத்தை யுண்டாக்கினான். நலங்கிள்ளி தானும் போர்க் கெழுந்தான். அக்காலத்தே, சினங் கெழுமிய அவன் தன் உள்ளத்தே நெடுங்கிள்ளி போர் தொடுத்தற்குக் காரணம் யாதாகலாமென வெண்ணி, அரசு கட்டிலைக் கவர்தல் இந் நெடுங்கிள்ளிக்குக் கருத்தாயின், என் நல்லடி பொருந்தி ஈயென விரந்தால் அரசினையேயன்றி என் உயிரையுந் தருகுவேன்; அவ்வாறின்றி துஞ்சு புலி இடறிய சிதடன் போலப் போர் தொடுத்து வறிதே மடிகின்றான்; இனி இவன் உய்ந்துபோதல் கூடாது என நினைந்து வஞ்சினங் கூறுவானாய், இவனை இப் போரில் வருந்தப் பொரேனாயின், என் மார்பின் தார் பொதுப்பெண்டிரின் பொருந்தா முயக்கத்தால் குழைவதாக என்று கூறுகின்றான். இவனும் இனிய செய்யுள் செய்யும் செந்நாவினனாதலால், இவ் வஞ்சினம் இப் பாட்டு வடிவில் வருவதாயிற்று. | மெல்ல வந்தென் னல்லடி பொருந்தி ஈயென விரக்குவ ராயிற் சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் இன்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்நிலத் | 5. | தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென் | | உள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற் றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக் கழைதின் யானைக்காலகப் பட்ட | 10. | வன்றிணி நீண்முளை போலச் சென்றவண் | | வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தன் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே. (73) |
திணையுந் துறையு மவை. சோழன் நலங்கிள்ளி பாட்டு.
உரை: மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி - மெல்ல வந்து எனது நல்ல அடியை யடைந்து; ஈ என இரக்குவ ராயின் - எமக்கு ஈய வேண்டுமென்று தாழ்ந் திரப்பாராயின்; சீருடை முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம் - அவர்க்குச் சீர்மையையுடைய முரசு பொருந்திய பழையதாய் வருகின்ற உரிமையை யுடைய எனது அரசாட்சி கொடுத்தலோ எளியது; இன் உயிராயினும் கொடுக்குவென் இந் நிலத்து - இனிய உயிரேயாயினும்கொடுப்பேன் இந் நிலத்தின்கண்; ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது - அமைச்சர் படைத்தலைவர் முதலாகிய வலியை யுடையோரது வலியைப் பாதுகாவாது; என் உள்ளம் எள்ளிய மடவோன் - என் உள்ளத்தையிகழ்ந்த அறிவில்லாதோன்; தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல - யாவர்க்கும் விளங்கத் துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல; உய்ந்தனன் பெயர்தலோ அரிது - பிழைத்துப் போதலோ அரிது; கழைதின் மைந்துடை யானை கால் அகப்பட்ட வன்திணி நீள் முளைபோல - மூங்கிலைத் தின்னும் வலியையுடைய யானையினது காலின்கண் அகப்பட்ட வலிய திணிய மூங்கிலது நீண்ட முளையை யொப்ப; சென்று - மேற்சென்று; அவண் வருந்தப் பொரேஎ னாயின் - அவ்விடத்து வருந்தும்படி பொருதிலேனாயின்; பொருந்திய தீதில் நெஞ்சத்து - கூடிய தீதில்லாத நெஞ்சத்தால்; காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிரின் - காதல் கொள்ளாத பலவகைப்பட்ட கரிய கூந்தலையுடைய பொதுப்பெண்டிரது; ஒல்லா முயக்கிடை என் தார் குழைக - பொருந்தாத புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக எ-று.
இரக்குவி ராயி னென்று பாடமோதுவாரு முளர். தீதில் காதல் கொள்ளாவென இயைப்பினு மமையும். உள்ளமென்றது, உள்ளத்தாற் சூழும் சூழ்ச்சியை. தன் மேம்பாடு கூறுகின்ற இடமாதலின், நல்லடி யென்பது தற்புகழ்தலென்னும் குற்றமாகாது.
விளக்கம்:சீருடை முரசு கெழு தாயத்து அரசு எனச் சிறப்பித்தது, பிறர்க்கு எளிதிற் கொடுத்தற்குக் கூடாமை விளக்கி நின்றது. ஆற்றலுடையோர் ஆற்றலை யறிந்து அதற்கேற்ப வொழுகுதல் அறிவுடைமை யாதலால், அதனை யறியாமையால் பகை வேந்தனை மடவோன் என்கின்றான். புலிதான் பிறர் கண்ணிற் படாது தன் முழைக்கண்ணே துஞ்சும் இயல்பிற்று; அது மக்களும் விலங்கும் இனிது காணத் துஞ்சுவது போலத் தான் இனிதிருப்பது அறிந்து வைத்தும், அப் புலியை இடறும் குருடன் அப் புலியாற் கொல்லப்படுவது போல, இப்பகைவேந்தனும் இறத்தல் ஒருதலை யென்பான் உய்ந்தனன் போதலோ அரிது என்கின்றான். பொருட் பெண்டிர், அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் (குறள்.911) எனப்படுதலின், அவரை, பொருந்திய தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளா மகளிர் என்றார். பொது மகளிரை உயர்ந்தோர் கூடாராகலின், குழைக வென்தாரே யென்றான். |