| 117.வேள் பாரிபாரியது நாடு புன்புலமானது கண்டு வருந்தி வந்த கபிலர் அவன் மகளிர் இருந்த பார்ப்பார் மனையடைந்து கண்டது கூறலுற்றார்;கூறுபவர்,
 இம் மகளிர்க்குத் தந்தையாகிய வேள் பாரியது நாடு அவன் உளனாகிய
 காலத்தில் அவன் செங்கோன்மையால் மழை பிழையாது; சான்றோர் பலர்
 நிறைந்திருந்தது; அத்தகைய நாடு இன்று அவனை இழந்து புல்லிதாயிற்
 றென இரங்கிப் பாடினர். அப் பாட்டே இது.
 
 |  | மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும் தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
 வயலக நிறையப் புதற்பூ மலர
 மனைத்தலை மகவை யீன்ற வமர்க்கண்
 |  | 5 | ஆமா நெடுநிரை நன்பு லாரக் கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப்
 பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே
 பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
 பாசிலை முல்லை முகைக்கும்
 |  | 10 | ஆய்தொடி யரிவையர் தந்தை நாடே. (117) | 
          திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.      உரை:மைம் மீன் புகையினும் - சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும்; தூமம் தொன்றினும் - எல்லாத் திசையினும் புகை
 தோன்றினும்; தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் - தென்றிசைக்
 கண்ணே வெள்ளி போக்குறினும்; வயலகம் நிறைய - வயலிடம்
 விளைவு மிக; புதல் பூ மலர - புதலிடத்துப் பூ மலர; மனைத் தலை
 மகவை ஈன்ற அமர் கண் ஆமா நெடு நிரை - மனையிடத்துக்
 குழவியை யீன்ற மேவிய கண்ணையுடைய ஆமாவினது நெடிய நிரை;
 நன் புல் ஆர - நல்ல புல்லை மேய; கோல் செம்மையின்
 சான்றோர் பல்கி - கோல் செவ்விதாகலின் அமைந்தோர் பலராக;
 பெயல் பிழைப்பு அறியாப் புன் புலத்தது - மழை பிழைப்பறியாத
 புல்லிய நிலத்தின்கண்ணது; பிள்ளை வெருகின் முள்ளெயிறு
 புரைய - இளையவெருகினது கூரிய பல்லை யொப்ப; பாசிலை
 முல்லை முகைக்கும் - பசிய இலையையுடைய முல்லை முகைக்கும்;
 ஆய் தொடி அரிவையர் தந்தை நாடு - நுண்ணிய தொழிலையுடைய
 வளையினை யணிந்த மகளிரையுடைய தந்தை நாடு எ-று.
 
 பல்கி யென்பதனைப் பல்க வெனத் திரிக்க. அரிவையர் தந்தை நாடு,
 பெயல் பிழைப்பறியாப் புன்புலத்தது வெனக் கூட்டுக. என்றதனாற் போந்தது.
 புன்புலத்ததாயிருந்ததே! அது பெயல் பிழைப்பறியாமை
 கோல்செம்மையினான் உளதாய தன்றே! அவ்வாறு கோல் செவ்விதாக
 நிறுத்தியவனை இழப்பதே யென்று அவன் நாடு கண்டு இரங்கியவாறாகக்
 கொள்க.
 
 விளக்கம்:மைம்மீன் - சனி; சனியைக் கரியவன் என்றும் கூறுப.
 கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி
 தென்புலம் படரினும் (சிலப். 10. 102-3) என்பதற்கு உரை கூறிய
 அடியார்க்கு நல்லார், கோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீன
 மென்னும் இவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோ ளெழினும்
 விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும்
 என்பது, கரியவன், சனி; புகைக்கொடி, வட்டம், சிலை, நுட்பம், தூம
 மென்னும் கோட்கள் நான்கினும் தூமக்கோள் என்றும் கூறுவது ஈண்டு
 ஒப்புநோக்கத்தக்கது. கோல் செம்மை யுறாதவழிச் சான்றோர் இராராகலின்,
 கோல் செம்மையின் சான்றோர் பல்கி என்றார். வெருகு - பூனை. ஆய்
 தொடியரிவைய ரென்றது, பாரி மகளிரை. சான்றோர் பல்கிப் பெயல்
 பிழைப்பறியாத நாடு இன்று பாரியை யிழந்து, அந் நலமுற்றும் கெட்டுப்
 புன்புலமாயிற்றென இரங்கியவாறாம். முகைக்கு மென்பது முகை யென்னும்
 பெயரடியாகப் பிறந்த பெயரெச்ச வினை.
 |