191. பிசிராந்தையார்

     பிசிராந்தையார் தமதூராகிய பிசிரில்   இருக்கையில் உறையூரிலிருந்து
அரசுபுரிந்த கோப்பெருஞ் சோழனுடைய   குணநலங்களைக்  கேள்வியுற்று
அவனைக் காண்டல் வேட்கை மிக்கிருந்தார்.    கோப்பெருஞ்  சோழனும்
பிசிராந்தையார்   நலங்களைக்   கேள்வியுற்றுப்    பெரு    நட்பினைத்
தன்னுள்ளத்தே வளர்க்கலுற்றான். இருவருடைய நட்புணர்ச்சிகள் தாமே
மிக்கு ஒருவரொருவர் தம் பெயரைக் கூறுமிடத்து, தத்தம் நண்பர் பெயரை
இணைத்துக் கூறிக்கொள்ளும் அளவில் சிறந்து நின்றன. கோப்பெருஞ்
சோழன்    வடக்கிருக்கப்    புக்கபோது சான்றோர் பலர்  அவனுடன் 
வடக்கிருப்பாராயினர்.   அக்காலை   அவன்,    பிசிராந்தையாரைக்  காண
விழைந்தான். ஒத்த உணர்ச்சியினராதலால் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழன்
வடக்கிருக்கப் புக்க தறியாது அனைக் காண்டல் வேண்டிப் பாண்டியநாட்டை 
விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார். அவர் வந்து சேர்தற்குள்
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விட்டானாக, அவற்கு நடுகல்லும்
நாட்டப்பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனஞ் சோர்ந்து  வருந்தினார்.

    சிறிது தெளிந்ததும் அருகிருந்த சான்றோருடன் கோப்பெருஞ்சோழன்
குணநலங்களைப் பேசி அளவளாவிக் கொண்டிருக்கையில் சிலர், “சான்றீர்!
யாங்கள் உங்களை நெடுங்காலமாகக் கேள்வியுறுகின்றோம்; உங்கள்
வாழ்நாளும் பலவாயினவே; இதனை நோக்க, உங்கட்கு நரை உளவாக
வேண்டும்; அவை சிறிதும் நும்பால் காணப்படவில்லையே! என்னோ
காரணம்?”என வினவினார். அவர்கள் இப்பாட்டால், “நரை திரைகட்குக்
காரணம் முதுமையன்று; மனக் கவலையே; எனக்குக் கவலை கிடையாது;
அதற்குக்  காரணம்  என்  குடியிலோ,  ஊரிலோ,  நாட்டிலோ
கவலையுண்டாதற்குரிய  நிலைகள்  இல்லை;  எவ்வாறெனன் என்
குடியில் என் மனைவி மக்கள் அறிவு நிரம்பியவர்கள்; என் ஏவலர் என்
குறிப்புப் பிழையா தொழுகுபவர்; எங்கள் ஊரில் ஆன்றவிந் தடங்கிய
கொள்கையையுடைய சான்றோர் பலர் உளர்; நாட்டு வேந்தனும் அறமல்லது
செய்யான்”எனத் தமது புலமையும் சான்றாண்மையும் சிறந்து விளங்குமாறு
கூறினார்.

 யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர்
யாண்கண் டனையரென் னிளையரும் வேந்தனும்
5அல்லவை செய்யான் காக்கு மதன்றலை
 ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே.
 (191)

    திணையும் துறையு மவை. கோப்பெருஞ்சோழன்
வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கேட்குங் காலம்
பலவாலோ, நரை நுமக்கில்லையாலோ என்ற சான்றோர்க்கு அவர்
சொற்றது.

    உரை: யாண்டு பல வாக - நுமக்குச் சென்ற யாண்டுகள்
பலவாயிருக்க; நரையில வாகுதல் யாங்காகியர் என - நரையில்லை
யாகுதல் எப்படி யாயினீரென; வினவுதி ராயின் - கேட்பீராயின்;
என் மாண்ட மனைவியொடு மக்களும் நிரம்பினர் - என்னுடைய
மாட்சிமைப் பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும்
அறிவு நிரம்பினார்; யான் கண்டனையர் என் இளையரும் - யான்
கருதிய  அதனையே கருதுவர்  என்னுடைய  ஏவல் செய்வாரும்;
வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் - அரசனும் முறையல்லாதன
செய்யானாய்க் காக்கும்; அதன் தலை - அதற்கு மேலே; யான்
வாழும் ஊர் - யான் இருக்கின்ற ஊரின்கண்; ஆன்று அடங்கி
அவிந்த கொள்கை - நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டு
முயர்ந்தாரிடத்துப் பணிந்து ஐம்புலனு மடங்கிய கோட்பாட்டினை
யுடைய; சான்றோர் பலர் - சான்றோர் பலராதலான் எ-று.

     ஆன்றவிந் தடங்கிய வென்பதற்குக் கல்வியால் நிறைந்து அதற்கேற்பச் சுவை
முதலியவற்றிற் செல்லும் அறிவவிந்து மனமொழி மெய்களான் அடங்கிய வெனினு 
மமையும். யாங்காகிய ரென்பதற்கு எவ்வாறாயிற்றென்றும் எப்படியாலாயிற்றென்னும் 
பொருள் கூறுவாரு முளர்.

    விளக்கம்: மனைக்கிழத்தி நற்குண நற்செய்கைகளை யுடையளாதல்
அவட்கு மாண்பு. மக்கள்பால் நிரம்புதற் கமைந்த அறிவாதலால் “அறிவு
நிரம்பினார்”என்று உரை கூறினார். மனை வாழ்வானும், மகப் பெற்று
வளர்த்தலாலும் மனைவிக்கும் இயற்கை யறிவு மிகுந்து நிரம்புதலின்,
“மனையொடு”எனச் சிறப்பித்தார். “செறிவு நிறைவும் செம்மையும் செப்பும்,
அறிவும் அருமையு பெண்பா லான”(பொருள். 15) எனத் தொல்காப்பியனார்
எடுத்துதோதுதல் காண்க. இளையர் ஏவலர். ஆன்றவிந்தடங்கிய
கொள்கையென்பதை, ஆன்று அடங்கியவிந்த கொள்கையென மாறிக்
கூட்டுக. குணங்களால் அமைந்தவழி அடக்கமும் அதுவே வாயிலாக
ஐந்தவித்தலும் உண்டாதல்பற்றி, இவ்வாறு உரை கூறப்பட்டது. கிடந்தபடியே
கொள்வார்க்கு இது பொருள் என்பார், “ஆன்றவிந்தடங்கி....... அமையும்”
என்றார்.