192. கணியன் பூங்குன்றனார் கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள மகிபாலன் பட்டியென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப் பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில் கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாராகிய தமிழ் பேராசிரியரும் இவ்வூரினராவர்; இவ்வூர் பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.
இச் சான்றோர், இடரினும், தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும் எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ் செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும் இல்லாதவர். இவ்வாறே பெரியோரென ஒருவரைப் புகழ்தலும் சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்துத் தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையானும் நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர் இதனைக் கண்ட அக்காலச் சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன் வந்து பாடுபெறு சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?என்றாராக, மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார். | யாது மூரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் | 5 | இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் | | இன்னா தென்றாலு மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது | | கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் | 10 | முறைவழிப் படூஉ மென்பது திறவோர் | | காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்த லதனினு மிலமே. (192) |
திணையுந் துறையு மவை. கணியன் பூங்குன்றன் பாட்டு.
உரை: யாதும் ஊர் - எமக்கு எல்லாம் ஊர்; யாவரும் கேளிர் -எல்லாரும் சுற்றத்தார்; தீதும் நன்றும் பிறர் தர வாரா - கேடும் ஆக்கமும் தாமே வரி னல்லது பிறர் தர தாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன - நோதலும் அது தீர்தலும் அவற்றை யொப்பத் தாமே வருவன; சாதலும் புதுவ தன்று - சாதலும் புதி தன்று, கருவிற் றோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தல் இனிதென மகிழ்ந் தன்றும் இலம் - வாழ்தலை யினிதென்று உவந்தது மிலம்; முனிவன் இன்னா தென்றலும் இலம் - ஒரு வெறுப்பு வந்து விடத்து இன்னாதென்று இருத்தலும் இலம்; மின்னொடு வானம் தண் துளி தலைஇ - மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான்; ஆனாது - அமையாது; கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று - கல்லை யலைத் தொலிக்கும் வளவிய பேரியாற்று; நீர் வழிப் படூஉம் புணை போல் - நீரின் வழியே போம் மிதவை போல; ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது - அரிய வுயிர் ஊழின் வழியே படும் என்பது; திறவோர் காட்சியின் தெளிந்தனம் - நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தெளிந்தே மாகலான்; மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலம் - நன்மையான் மிக்கவரை மதித்தலும் இலம்; சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் - சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினு மிலேம் எ-று.
தலைஇ யென்பதனைத் தலைய வெனத் திரிக்க. முனிவி னின்னா தென்றலு மிலமேஎன்றதற்கு, முன்னே கூறிய வாழ்தலை வெறுப்பான் இன்னாதென்று இகழ்ந்திருத்தலு மில்லே மெனினும் அமையும்.
விளக்கம்: யாவரும் கேளிராகியவழி அவருறையு மிடமெல்லாம் ஊராதலின், யாதும் ஊரேயென்றார். பிறர் தர வாரா வெனவே தாமே வரு மென்பதும், புதுவ தன்றெனவே கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்பதும் வருவிக்கப்பட்டன. ஊழின் உண்மையும் அதன் செயற்கூறும் காட்சியளவையானன்றிக் கருத்தளவையானறிந்து நூல்களால் குறிக்கப்பட்டிருத்தலின், திறவோர் காட்சியிற் றெளிந்தன மென்றார். மாட்சியிற் பெரியவர் - மாட்சியால் மிக்கவர். மாட்சியாற் குறைந்தவர் சிறியவர். தலைஇ யென்பது தலைஇய வென்பதன் திரிபாதலால், தலைஇ......திரிக்கஎன்றார். |