88. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சியொடு பொருது வெல்வதாக அவன் பகைவர் சிலர் தம்முட் பேசிக்கொண்டது ஒளவையார்க்குத் தெரிந்தது. அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாதெனத் தேர்ந்த ஒளவையார், அவர் தம்முடைய கூழைப்படை தார்ப்படை யென்ற இவற்றின ்வலி நினைந்து தருக்குகின்றமை யறிந்தார். அவர் உடனே அப் பகைவரை நோக்கி, நீவிர் அதியமானைக் காணாமுன்பு கூழையையும் தாரையும் கொண்டு பொருது வெல்வேம்என்பது கூடாது; காண்பீராயின் அவ்வாறு நினைத்தற்கே அஞ்சுவீர்கள்என்று இப் பாட்டால் அறிவுறுத்துகின்றார். | யாவி ராயினுங் கூழை தார்கொண் டியாம்பொருது மென்ற லோம்புமி னோங்குதிறல் ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன் கதிர்விடு நுண்பூ ணம்பகட்டு மார்பின் | 5 | விழவுமேம் பட்ட நற்போர் முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே.(88) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: யாவிராயினும் - எப்பெற்றிப்பட்டீராயினும், கூழை தார் கொண்டு - அணியையும் தூசியையும் கொண்டு; யாம் பொருதும் என்றல் ஓம்புமின் - யாம் அவனொடு பொருவோ மென்று சொல்லுதலைப் பாதுகாமின்; ஓங்கு திறல் ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெரு மகன் - உயர்ந்த வலியையுடைய பாடஞ் செய்யும் விளங்கிய நெடிய வேலையுடைய இளையோர்க்குத் தலைவனாகிய; கதிர் விடு நுண் பூண் - சுடர் விடுகின்ற நுண்ணிய தொழிலையுடைய பூண் அணிந்த;அம் பகட்டு மார்பின் - அழகியவலிய மார்பினையும்; விழவு மேம்பட்ட நற்போர் முழவுத் தோள் - கள வேள்வி முதலாகிய விழாச் சிறந்த நல்ல போரைச் செய்யும் முழாப்போலும் தோளினையுடைய; என் ஐயைக் காணா வூங்கு - என் இறைவனைக் காண்பதற்கு முன், கண்டால் அது செய்தல் அரிதாகலான் எ-று.
என்னையைக் காணா வூங்கு யாவிராயினும் பொருது மென்றல் ஓம்புமின் எனக் கூட்டுக.
விளக்கம்:அறிவு ஆண்மை பொருள் படை முதலியவற்றால் மிகச் சிறந்திருக்கின்றீராயினும் என்பதற்கு, யாவிராயினும்என்றார்; முடிவேந்தராயினும் குறுநில மன்னராயினும், ஒருவராயினும் பலராயினும் அடங்க இவ்வாறு கூறினா ரெனினு மமையும். கூழை, பக்கத்துப் பின்னரும் அணிவகுத்து வரும் படை. தார் - தூசிப்படை. பாடம்செய்த வேலும் வாளும் கூர்மையும் ஒளியுமுடைய வாதலால், ஒளிறிலங்கு வாள் என்றார். பாடஞ் செய்தலாவது கூர்மை மிகத் தீட்டி அது துருவேறி மழுங்காவாறு நெய்யணிந்து தோலுறையுள் வைத்தல். பகடு, ஈண்டு வலிமை குறித்து நின்றது. விழவு மேம்பட்ட போர் என்றதனால், விழவு, கள வேள்வி முதலாயின குறிப்பதாயிற்று. கண்டவழித் தம் கூழையும் தாரும் போர்க்கு ஆற்றா வெனவுணர்ந்து அஞ்சி நீங்குவர் என்பது கருத்து. |