92.அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான், தான் நெடிது உயிர்வாழ்தலினும் ஒளவையார் நெடிது வாழ்தலால் உலகுயிர்கட்கு ஆக்கமாகும் என்ற பேரருளால் தான் பெற்ற நெல்லிக் கனியைத் தந்தருளியது கண்ட ஒளவையார் மனங் குழைந்து நாக்குழறித் தாம் நினைத்தவாறெல்லாம் அவனைப் பாராட்டக் கருதி, நெடுமான் அஞ்சி, நீ என்பால் மிக அருளுதலால் என் சொல் தந்தையர்க்குத் தம் புதல்வர் சொல்லும் சொற்போல அருள் சுரக்கும் தன்மையனவாம்என்று இப்பாட்டாற் கூறியுள்ளார். | யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க் கருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை என்வாய்ச் சொல்லு மன்ன வொன்னார் | 5 | கடிமதி லரண்பல கடந்த நெடுமா னஞ்சிநீ யருளன் மாறே. (92) |
திணை:அது: துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை:யாழொடுங் கொள்ளா - யாழோசை போல இன்பமும் செய்யா; பொழுதொடும் புணரா - காலத்தொடும் கூடியிரா; பொருள் அறிவாரா - பொருளும் அறிய வாரா; ஆயினும்-; தந்தையர்க்கு அருள் வந்தனபுதல்வர் தம் மழலை தந்தையர்க்கு அருளுதல் வந்தன் பிள்ளைகளுடைய இளஞ்சொல்; என் வாய்ச் சொல்லும் அன்ன என்னுடைய வாயின்கட் சொல்லும் அத்தன்மையன; ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி - பகைவரது காவலையுடைத்தாகிய மதிலையுடைய அரண் பலவற்றையும் வென்ற நெடுமானஞ்சி; நீ அருளன் மாறு - நீ அருளுதலால் எ-று.
புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்னவெனக் கூட்டுக. யாழென்றது, யாழிற் பிறந்த ஓசையை. பொருளும் என்னும் உம்மை, விகாரத்தால் தொக்கது.
விளக்கம்:இளம் புதல்வர் வழங்குஞ் சொல்லோசையில் யாழினது இனிய ஓசை காணப்படாதாயினும், அவர்கள் சொல்வழிப் பிறக்கும் இன்பத்திற்கு யாழிசையின் இன்பம் நிகராகாது தாழ்வுபடும்; பெருந் துன்பம் போந்து வருத்துகின்றபோதும் தந்தையர்க்குப் புதல்வர் போந்து வழங்கும் சொல் நிரம்பாமையின் குறிக்கும் பொருள் விளங்காதாயினும், தந்தையர் அச்சொல்லைக் கேட்டற்குப் பெரிதும் விரும்புவர். மழலை - இளஞ் சொல்; எழுத்து வடிவு பெறாது தோற்றும் இளஞ்சொல் லென்றும் கூறுவர். புதல்வர் மொழியும் மழலை பொருணலமும் இடச்சிறப்புமுடைய வல்லவாயினும் தந்தையரால் அருள்சுரந்து கேட்கப்படுதல் போல என் வாய்ச் சொல்லையும் நீ அருள்சுரந்து கேட்கின்றாய்; நின் அருள் இருந்தவாறென்னே என்பதாம். என் சொல்லென் றொழியாது வாய்ச்சொல் லென்றது, தமது பணிவு தோன்றி நின்றது. கடிமதில் அரண்பல கடந்த நீயென்றது அவனது போரடு திருவும் அதற்கேற்ப வேண்டும் மற மிகுதியும் உணர்த்திற்று. இன்ன செய்கையையுடைய நீ என்பால் அருள் மிகச் சுரந்தொழுகுவது என்னை நின் மக்களுள் வைத்துப் பேணுகின்ற அன்பு மிகுதியைக் காட்டுகின்ற தென்றவாறாயிற்று. |