|        197.  சோழன் குராப்பள்ளித் துஞ்சிய       பெருந்திருமா வளவன்             சோழன் கரிகாற் பெருவளத்தானைத் திருமா       வளவன் என்றும் சான்றோர்   கூறுபவாதலின்         இவ்   வளவன்  குராப்பள்ளித்  துஞ்சிய
 பெருந்திருமா வளவ னெனச் சிறப்பிக்கப்படுகின்றான். இவன் காலத்தே,
 சேர        நாட்டில்   சேரமான்   குட்டுவன்         கோதையும்       பாண்டி நாட்டில்
 வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஆட்சி புரிந்தனர்.      சேரமான்
 குட்டுவன்         கோதையையும், சோழன்        இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய
 நலங்கிள்ளி சேட்சென்னியையும், பாடிச் சிறப்புற்ற      கோனாட்டு எறிச்சிலூர்
 மாடலன்         மதுரைக் குமரனார்,  நலங்கிள்ளி  சேட்சென்னிக்குப்         பின்
 தோன்றிய இப் பெருந்திருமா வளவனை ஒருகால் காணப்போந்தார்.      இவரது
 மனப் பண்பை யறியாது, செல்வச் செருக்கால் கண்      மூடியிருந்த வளவன்
 தான் தரவிருந்த பரிசிலை நீட்டித்தான். அதனால்      குமரனார்க்கு வருத்த
 முண்டாகவே, தமது மனக்கோளைப் புலப்படுத்தும்      இந்த அழகிய பாட்டைப்
 பாடினார். இதன்கண், வேந்தே! யாங்கள்      அரசர் நெடுந்தோர்களை
 யுடையரென்றோ, கடல் போலும்       படையினையுடைய ரென்றோ,      மேற்சென்ற
 போர்க       ளனைத்தினும் வென்றி மிகுபவரென்றோ கருதி,      அவர்களை வியந்து
 பாராட்டும் பண்பினோ மல்லோம். எம்மால் வியந்து      பாராட்டப்படுபவர் சீறூர்
 மன்னராயினும் எம் பாடறிந்தொழுகும் பண்புடையாரே யாவர்.      எத்துணைத்
 துன்பம் வந்தெய்தினும்,         உண்மை யுணர்வும் நல்லறிவும்        இல்லாதவர்
 எவரோ, அவருடைய செல்வத்தைச் சிறிதும் வேண்டேம்;      நல்லறிவுடையவர்
 மிக்க வறுமை யுற்றாராயினும், அவ்வறுமை பயன்படுவதாகலின்,      அதனைப்
 பெரிதும் மதித்துப் பாராட்டுவேம்என்று குறித்தார். பெருந்திருமா வளவன்,
 நல்லிசைப் புலவர் பெருமானுடைய மனக்கோளும் அறிவு      கொளுத்தும்
 ஆண்மையும் நினைந்து, அவர்க்குப் பெரும் பரிசில் நல்கிச் சிறப்பித்தான்.
 
 மதுரைக்  குமரனார்  இப்  பாட்டின்கண்,        பாடறிந் தொழுகும்
 பண்பில்லாத வேந்தர்  எத்துணைப்  பெரியாராயினும்,        அவர்களைப்
 பொருளாகக் கொள்ளே மெனச் செம்மாந்து கூறும் இக்       கூற்று, பெருந்திருமா
 வளவன் தொடக்கத்தில், தன் பொருளும்       படையும் பெருமையுமெண்ணி
 இறுமாந்திருந்தமையும்,       அதனால் அவன் அவர்க்குப்  பரிசில் தர
 நீட்டித்தமையும் தோற்றுவிக்கின்றது. இவரோரன்ன       மனத்திட்ப மமைந்த
 தமிழ்ப் பெரும் புலவர்கள் இன்றும் தோன்றற்குரிய வாய்ப் புக்கள்       நாட்டில்
 உண்டாவது கண்டு தமிழகம் இறும்பூது கொள்கின்றது.
 |  | வளிநடந்             தன்ன வாச்செல லிவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரின ரெனாஅக்
 கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு
 மலைமாறு மலைக்குங் களிற்றின             ரெனாஅ
 |  | 5 | உருமுரற்             றன்ன வுட்குவரு முரசமொடு |  |  | செருமேம்             படூஉம் வென்றிய ரெனாஅ மண்கெழு தானை             யொண்பூண் வேந்தர்
 வெண்குடைச் செல்வம்             வியத்தலோ விலேமே
 |  |  | எம்மால்             வியக்கப் படூஉ மோரே |  | 10 | இடுமுட்             படப்பை மறிமேய்ந் தொழிந்த |  |  | குறுநறு             முஞ்ஞைக் கொழுங்கட் குற்றடகு புன்புல வரகின் சொன்றியொடு             பெறூஉம்
 சீறூர் மன்ன ராயினு மெம்வயிற்
 பாடறிந்             தொழுகும் பண்பி னாரே
 |  | 15 | மிகப்பே             ரெவ்வ முறினு மெனைத்தும் |  |  | உணர்ச்சி             யில்லோ ருடைமை யுள்ளேம் நல்லறி வுடையோர் நல்குர
 வுள்ளுதும் பெருமயா             முவந்துநனி பெரிதே.(197)
 | 
       திணையுந் துறையு         மவை. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா  வளவன்  பரிசில்  நீட்டித்தானைக்  கோனாட்டு
 எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
 
 உரை: வளி  நடந் தன்ன  வாச் செலல் இவுளியொடு         -
 காற்று  இயங்  கினாற்போலும்         தாவுதலுடைத்தாகிய கதியையுடைய
 குதிரையொடு;  கொடி  நுடங்கும் மிசைய தேரினர்       எனாஅ -
 கொடி நுடங்கும் உச்சியையுடைய தேரினையுடைய ரெனவும்;      கடல்
 கண் டன்ன ஒண்   படைத்   தானையொடு - கடலைக்      கண்டாற்
 போலும் ஒள்ளிய       படைக்கலத்தையுடைய சேனையுடனே; மலை      மாறு
 மலைக்கும்களிற்றினர் எனாஅ - மலையோடு மாறுபட்டுப் பொரும்
 களிற்றினையுடைய ரெனவும்; உரும் உரற் றன்ன உட்கு  வரு
 முரசமொடு - இடி முழங்கினாற்போலும்       அஞ்சத்தக்க முரசத்தோடு;
 செரு மேம்படூஉம் - வென்றியர்       எனாஅ - போரின்      மேம்படும்
 வெற்றியையுடைய ரெனவும்; மண் கெழு தானை ஒண் பூண்      வேந்தர்
 - நிலத்தைப் பொருந்தின படையினையுடைய ஒள்ளிய      பூணினையுடைய
 அரசர்; வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலம் - வெண்      கொற்றக்
 குடை நிழற்றப்படும் செல்வத்தை மதித்த லில்லேம்; எம்மால்
 வியக்கப்படூஉமோர் - எங்களால் மதிக்கப்படுவோர்; இடு முள்
 படப்பை - இடப்பட்ட முள்வேலியையுடைய தோட்டத்து; மறி மேய்ந்
 தொழிந்த - மறி தின்ன வொழிந்து நின்ற; குறு நறு முஞ்ஞை
 கொழுங்கண் குற்றடகு - குறிய நாற்றத்தினையுடைய முஞ்ஞையது
 கொழுவிய கண்ணிற் கிளைக்கப்பட்ட குறிய இலையை; புன் புல
 வரகின் சொன்றியொடு பெறூஉம் - புல்லிய நிலத்தில் விளைந்த
 வரகினது சோற்றுடனே பெறுகின்ற; சீறூர் மன்ன ராயினும் - சிறிய
 வூரையுடைய வேந்தராயினும்; எம் வயின் பாடறிந்தொழுகும்
 பண்பினோர் -       எம்மிடத்துச் செய்யும் முறைமையை யறிந்து நடக்கும்
 குணத்தினையுடையோர்காண்;       மிகப்பேர் எவ்வம் உறினும் -யாம் மிகப்
 பெரிய துன்ப       முறினும்; எனைத்து  உணர்ச்சியில்லோர்  உடைமை
 யுள்ளேம் - சிறிதும் அறிவிலாதோருடைய செல்வம் பயன்படாமையின்
 அதனை        நினையேம்;       நல் லறி வுடையோர் நல்குரவு- நல்லறிவினை
 யுடையோரது வறுமை பயன் படுதலின் அதனை; பெரும - பெருமானே;
 யாம்       உவந்து நனி பெரிது உள்ளுதும் - யாம் உவந்து மிகப் பெரிதும்
 நினைப்பேம் எ-று.
 
 எனா வென்பது, எண்ணிடைச் சொல்.
 
 விளக்கம்: வாவுதல்,       தாவுதல்; இதனால் குதிரையை வாம்பரி
 யென்றலு       முண்டு. பாடறிந் தொழுகும் பண்பிலர் வேந்தருடைய தேரும்
 களிறும்         வென்றியும்  மிகச்  சிறந்தனவாயினும்,       எம்மாற் பொருளாகக்
 கருதப்படா  வெனத்         தமது   கருத்தை   வற்புறுத்தற்கு,  அவை
 ஒவ்வொன்றனையும்       வகுத்தும்   சிறப்பித்தும் கூறினார். பரிசிலர்க்கு
 வழங்குதற்       குரியவாகலின்   தேரையும்          களிற்றையும்,   பொருட்கு
 வருவாயாதலின்       வென்றியையும் எடுத்தோதினார். முஞ்ஞை யென்றது,
 இப்போது       முன்னைக்கீரை  யென வழங்குகிறது. பசுமுன்னை, எருமை
 முன்னை       யென்ற வகை யிரண்டனுள்,  பசுமுன்னையே  ஈண்டைக்குப்
 பயன்படுவது.       பாடறிந்தொழுகும் பண்புடையவர் நல்லறிவுடையராதல்
 வெளிப்படையாதலால்,அப்       பண்பிலாரை, உணர்ச்சி யில்லோர்என்றார்.
 நல்லறிவுடையோர்       நல்குரவு உள்ளுதும் என்றது, பழிமலைந் தெய்திய
 ஆக்கத்திற் சான்றோர்,       கழிநல் குரவே தலை(குறள்.657) என்ற
 திருவள்ளுவர்       கருத்தைப் புலப்படுத்துகிறது.
 |