130. வேள் ஆய் அண்டிரன்

     ஆய் அண்டிரன் திருமனைக்கண் ஏணிச்சேரி முடமோசியார்
தங்கியிருந்த காலையில், அவன்பால் வந்த பரிசிலர் பலர்க்கும் அவன்
களிறுகளை மிகுதியும் வழங்குவது கண்டு பெருவியப்புக் கொண்டார்.
அதனால் அவர் அவனை நோக்கி, “ஆயே! நின்னையும் நின் மலையையும்
பாடிவரும் பரிசிலர் பலர்க்கும் மிக்க யானைகளை வழங்குகின்றாய்;
அவற்றின் தொகைகளை நோக்கின், நீ முன்பு கொங்கரொடு பொருத
காலத்தில் அவர்கள் நினக்குத் தோற்றுக் கீழே எறிந்துவிட்டு உயிர் தப்பி
மேலைக் கடற்கரைப் பகுதிக்கு ஓடிய காலத்தில் அவர் எறிந்து சென்ற
வேல்களினும் பலவாக வுள்ளன. யானைகள் இத்துணை மிகுதியாக
இருத்தற்குக் காரணம் நோக்கினேன்; ஒன்றும் புலனாகவில்லை. ஒருகால்
நின் நாட்டு இளம்பிடி ஒரு சூலுக்குப் பத்துக் கன்று ஈனுமோ?” என்று
இப்பாட்டிற் றம்வியப்புத் தோன்றக் குறித்துள்ளார்.

 விளங்குமணிக் கொடும்பூ ணாஅய் நின்னாட்
டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ
நின்னுநின் மலையும் பாடி வருநர்க்
கின்முகங் கரவா துவந்துநீ யளித்த
5அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க்
 குடகட லோட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே.
   (130)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை : விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய் - விளங்கிய
மணிகளான் இயன்ற வளைந்த பூணாகிய ஆரத்தையுடைய ஆயே;
நின்நாட்டு இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனுமோ - நினது
நாட்டின்கண் இளைய பிடி ஒரு கருப்பம் பத்துக்கன்று பெறுமோ
தான்; நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு - நின்னையும் நின்
மலையையும் பாடிவரும் பரிசிலர்க்கு; இன்முகம் கரவாது - இனிய
முகத்தை யொளியாது வெளிப்படுத்தி; உவந்து - காதலித்து; நீ
அளித்த அண்ணல் யானை எண்ணின் - நீ கொடுத்த தலைமையை
யுடைத்தாகிய யானையை யெண்ணின்; கொங்கர்க் குட கடல் ஓட்டிய
ஞான்றை - நீ கொங்கரை மேல்கடற் கண்ணே ஓட்டப்பட்ட நாளில்;
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பல - அவர் புறங்கொடுத்தலால்
தம்மிடத்தினின்றும் பெயர்த்துப் போகப்பட்ட வேலினும் பல எ-று.

    தலைப்பெயர்த் திட்ட வேலென்ற கருத்து, படைக்கல மில்லாதாரை
ஏதஞ்செய்வா ரில்லையாதலின், தம்முயிர்க்கு அரணாகப் பெயர்த்திடப் பட்ட
வேலென்பதாம்; அன்றிப்புறக்கொடுத்தோடுகின்றார் முன்னோக்கிச் சாய்த்துப்
பிடித்த வேல் என்பாரு முளர். இதனால் வென்றிச் சிறப்பும் கொடைச்
சிறப்பும் கூறியவாறு.

    விளக்கம் : யானை ஒரு சூலுக்கு ஒரு கன்றுதான் ஈனுமேயன்றிப் பல
கன்றுகளை யீனாது; யானைகளின் தொகை மிகுதி கண்டு வியந்து கூறுதலின்
இவ்வாறு கூறினார். ஆய் கோயிலின் வெளியில் முழுதும் யானைகள்
மிகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் என்பதைச் சான்றோர், “இரவலர் வரூஉ
மளவை அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை” (நற். 237) என்பது
காண்க. இரவலர்க்குக் கொடுக்கும் திறத்தை “இன்முகம் கரவாது உவந்துநீ
யளித்த” என்றும் கொடுக்கப்பட்ட யானைகளின் இயல்பை, “அண்ணல்
யானை” யென்றும் குறித்துள்ளார். யானைக் கொடை வாயிலாக அண்டிரன்
கொங்கரை வென்ற திறத்தையும் குறிக்கக் கருதலின், “கொங்கர்க்
குடகடலோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த்திட்ட வேல்” என்றார்.