16. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இச் சோழன் காலத்தே சேரநாட்டில் சேரமான் மாரி வெண்கோவும், சேரமான் மாந்தரஞ் சேர லிரும்பொறையும், பாண்டிநாட்டில் பாண்டியன் கானப்பேர் எயில் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஆட்சிபுரிந்தனர். இவற்குச் சேரமன்னர் இருவரில் மாரி வெண்கோ நண்பன். ஒரு கால் மாரிவெண்கோவும் உக்கிரப் பெருவழுதியும் இப் பெருநற்கிள்ளியும் நட்பால் பிணிப்புற்று ஒருங்கிருப்ப ஒளவையார் கண்டு பெருமகிழ்வுற்று, வானத்து வயங்கும் மீனினும் மாமழைத் துளியினும் நும்முடைய வாழ்நாட்கள் உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக என வாழ்த்திச் சிறப்பித்தனர். பிறிதொருகால், இந்நற்கிள்ளிக்கும் சேரமான் மாந்தரஞ் சேரலிரும் பொறைக்கும் போருண்டாயிற்று. அக்காலை, சோழற்குத் துணையாய்த் தேர்வண் மலையனென்பான் போந்து இரும்பொறையை வென்று புறங்கண்டான். இக் கிள்ளியை உலோச்சனார் என்னும் சான்றோர் சென்று கண்டபோது அவர்க்கு இவன் மலைபயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தமும், வேறுபட்ட வுடையும் பிறவும் தந்து சிறப்பித்தான். அவரும் அடல் வெங்குருசில் மன்னிய நெடிதே யென வாழ்த்தி மகிழ்ந்தார். இவன் பெயர், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி யெனப்படுவது நோக்கின், இவன் இராச சூயம் என்னும் வேள்வி செய்தவனென்பது தெரிகிறது. பாண்டரங் கண்ணனார் என்னும் சான்றோர் இவன் தன் பகைவர் நாட்டை யழித்த செய்தியைப் பாடிச் சிறப்பிக்கின்றார்.பாண்டரங்கன் என்பார்க்கு மகனாதலால் இவர் பாண்டரங் கண்ணனார் எனப்பட்டார். கண்ணனாரென்பது இவர தியற்பெயர். இப்பாட்டின்கண், இவர் இப்பெருநற்கிள்ளியை நோக்கி, முருகன் போலும் குருசில், நீ பகைவர் நாட்டுட் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது; இவ்வாறு தீயிட்டுக் கொளுத்திய அந்நாடு கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணை பொருந்திய நன்னாடாகும் ஆயினும் நீ எரி யூட்டுவான் செய்த போரின்கண் நின் களிறுகளும் நின் கருத்தொப்பப்போர் மலைந்தன என்று கூறுகின்றார். | | வினைமாட்சிய விரைபுரவியொடு மழையுருவின் தோல்பரப்பி முனைமுருங்கத் தலைச்சென்றவர் வினைவயல் கவர்பூட்டி | | 5. | மனைமரம் விறகாகக் | | | கடிதுறைநீர்க் களிறுபடீஇ எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப் புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத் | | 10. | துணைவேண்டாச் செருவென்றிப் | | | புலவிவாட் புலர்சாந்தின் முருகற் சீற்றத் துருகெழு குருசில் மயங்குவள்ளை மலராம்பற் பனிப்பகன்றைக் கனிப்பாகல் | | 15. | கரும்பல்லது காடறியாப் | | | பெருந்தண்பணை பாழாக ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை நாம நல்லமர் செய்ய ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே. (16) |
திணை: வஞ்சி; துறை: மழபுலவஞ்சி. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது. உரை: வினை மாட்சிய விரை புரவியொடு-போரிற்கு நன்மையை யுடையவாகிய விரைந்த குதிரையுடனே; மழை உருவின தோல் பரப்பி- முகில்போலும் நிறத்தையுடைய பரிசையைப் பரப்பி; முனை முருங்கத் தலைச் சென்று - முனையிடம் கலங்க மேற்சென்று; அவர் விளை வயல் கவர்பு ஊட்டி-அவரது நெல்விளை கழனியைக் கொள்ளை யூட்டி; மனை மரம் விறகாக - மனையிடத்து மரமே விறகாக; கடி துறை நீர்க் களிறு படீஇ - காவற்பொய்கைகளின் நீரிலே களிற்றைப் படிவித்து; எல்லுப்பட இட்ட சுடு தீ விளக்கம் - விளக்கமுண்டாக இடப்பட்ட நாடு சுடு நெருப்பினது ஒளிதான்;செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற - விடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது செக்கர் நிறம் போலத் தோன்ற; புலம் கெட இறுக்கும் வரம்பில் தானை - இடமில்லையாகச் சென்றுவிடும் எல்லையில்லாத படையினையும்; துணை வேண்டாச் செரு வென்றி - துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும்; புலவு வாள் - புலால் நாறும் வாளினையும்; புலர் சாந்தின் - பூசிப் புலர்ந்த சாந்தினையும்; முருகற் சீற்றத்து உருகெழு குருசில் - முருகனது வெகுட்சிபோலும் வெகுட்சியினையுமுடைய உட்குப் பொருந்திய தலைவ; மயங்கு வள்ளை மலர் ஆம்பல் - ஒன்றோடொன்று கலந்த வள்ளையையும் மலர்ந்த ஆம்பலையும்; பனிப் பகன்றை - குளிர்ச்சியை யுடையபகன்றையையும்; கனிப் பாகல் - பழத்தையுடைய பாகலையுமுடைத்தாகிய; கரும் பல்லது காடு அறியா -கரும்பல்லது பிறிது காடறியாத; பெருந் தண் பணை பாழாக- பெரிய மருதம் பாழாக; ஏம நன்னாடு ஒள்ளெரி ஊட்டினை - காவலையுடைய நல்ல நாட்டை ஒள்ளிய தீயை யூட்டி; நாம நல்லமர் செய்ய - அஞ்சத்தக்க நல்ல போரைச் செய்ய; ஓராங்கு மலைந்தன - நின் கருத்திற்கேற்ப ஒரு பெற்றிப் படப் பொருதன; பெரும-; நின் களிறு-நின்னுடைய களிறுகள் எ-று.
தோல் பரப்பி யென்பது முதலாகிய வினையெச்சங்களை இறுக்குமென்னும் பெயரெச்ச வினையொடு முடித்து, அதனைத் தானை யென்னும் பெயரோடுமுடிக்க. பாகற் றண்பணை யென வியையும். எல்லுப்பட இட்ட சுடு தீ யென்றதனைத் தானைக்கு அடையாக்குக. கவர் பூட்டி யென்பதற்கு விரும்பிக் கொள்ளை யூட்டியெனவும், புலங்கெட வென்பதற்கு நாடழியவெனவும், புலவு வா ளென்பதற்குப் புலாலுடைய வாளெனவும் உரைப்பினு மமையும்.
குருசில், பெரும, நீ அமர் செய்ய நின் களிறு ஓராங்கு மலைந்தன வென வினைமுடிவு செய்க.
பாகல் பலாவென் றுரைப்பாரு முளர். ஏம நன்னா டொள்ளெரி யூட்டி, யென்றதனால், இது மழபுலவஞ்சியாயிற்று.
விளக்கம்: கவர்பு - கொள்ளை.கடி துறை - ஊரார் உண்ணுநீர் கொள்ளும் நீர்நிலைகளில் மக்களும் விலங்குகளும் இறங்கிப் படிந்து நீரைக் கெடுக்காவண்ணம் காத்தல் பண்டையோர் மரபாதலால் அவற்றைக் கடி துறை யென்றார். தண் பணை - மருதநிலம். நாம் - அச்சம். போர் நிகழுமிடத்துப் பகைவர் நாட்டு விளைவயல்களைக் கெடுப்பதும், நீர்நிலைகளைச் சிதைத்தழிப்பதும், நெல் கரும்பு முதலியன விளையும் மருதநிலங்களைப் பாழ் செய்வதும், மக்கள் குடியிருக்கும் ஊர்களைத் தீயிட்டழிப்பதும், அவர்தம் பொருளைச் சூறையாடுவதும் நிகழ்வது குறித்தே, இப்போர் நிகழ்ச்சி சான்றோர்களால் வெறுக்கப்படுகின்றன. இதனை இச் சான்றோர் விரித் தோதுவது வேந்தன் உள்ளத்தில் அருள் பிறப்பித்துப் போரைக் கைவிடுவித்தல் கருதி யென்றறிதல் வேண்டும்.தோல்பரப்பி கவர்பூட்டி, களிறு படிவித்துப் புலங்கெட இறுக்கும் தானை யென இயைவது விளங்க, தோல்....முடிக்க என்றார். பாகலையுடைய தண்பணை, காடறியாத் தண்பணை யெனக் கொள்க. கவர்வு, விருப்பாகும் என்பது தொல்காப்பியம்; அதற்கேற்பக் கவர்பூட்டி யென்பதற்கு விரும்பிக் கொள்ளையூட்டி என்றும், புலம் என்பது நாட்டிற்கும் பொருந்துதலால், புலம் கெட வென்பதற்கு நாடழிய வென்றும் பொருள்கொள்ளலாம் என்றார். இறுத்தல் - தங்குதல். தங்குதலை விடுதலென்பதும் வழக்காதலால், இறுக்கும்என்பதற்கு விடும் என்று உரை கூறினார். |