190. சோழன் நல்லுருத்திரன் சோழன் நல்லுருத்திரன் என்பான், சங்கநூற் காலத்துச் சோழ வேந்தர்களுள் காலத்தாற் பிற்பட்டவனென்பதை இவன் பெயரே நன்கு தெரிவிக்கின்றது. ஆயினும், இவன் உயர்ந்த உள்ளமும் பரந்த கல்வி கேள்வியும் சிறந்த வினைத்திட்பமும் கொண்டவன். முடி வேந்தனாகலின், எப்போழ்தும் இவனைக் குறுநில மன்னரும் செல்வ மக்களும் சூழ்ந்து கொண்டே யிருப்பர். இவர்களின் துணைகொண்டு இவன் அரிய செயல்கள் பல செய்து மிக்க பொருளும் நல்ல புகழும் பெற்றான். இச் செயல்களைச் செய்யுமிடத்துத் தனக்குத் துணையாயிருந்த மன்னரும் செல்வருமாகிய சுற்றத்தாரின் குணஞ் செயல்களைப் பயின்று அறியும் வாய்ப்பு இவனுக்குச் சிறப்புற அமைந்தது. அவருள் சிலருடைய கூட்டுறவால் ஆக்கமும், வேறு சிலருடைய துணையால் கேடுமுண்டாகக் கண்டு அவர்களை யாராய்ந்தான். ஆக்கத்திற்குத் துணையாயிருந்தவர் உயர்ந்த உள்ளமும், தாம் மேற்கொண்டு கடைப்பிடிக்கும் அறக் கொள்கையின் வழுவா தொழுகும் மனத் திட்பமும், அதற்கு மாறுபடவும், வேறுபடவும் வரும் பொருள் எத்துணைச் சீரிதாயினும் வேண்டாத விறலும் உடையராதலைக் கண்டான். கேடு நேர்ந்த காலத்து அதற் கேதுவாயிருந்தவரை ஆராய்ந்த வழி, அவர்கள், ஏனையர்போல உள்ளத் துயர்வும் கடைப்பிடியும் விறலும் இலராயினும், உழைப்பார் உழைக்க அவர்தம் உழைப்புவழி வரும் ஊதியத்தை நேர் முகமாகவோ மறைமுகமாகவோ சிறுகச் சிறுகத் தாம் பறித்துக்கொள்ளும் பண்பும் அதற்கேதுவாகிய குறுகிய வுள்ளமும், தன்னலச் சூழ்ச்சியும், ஒன்று உற்றவிடத்துத் தம்மை விற்றுவிடத்தக்க கீழ்மையும் உடையராதலை யறிந்தான். உடனே இக் கீழோரை விலக்கி ஏனையோரைத் தழீஇக் கொள்ளுமிடத்து இப் பாட்டினைப் பாடியுள்ளான். இதன்கண் எலிபோலும் மனமும் தாமுடையவற்றை மேலுமேலும் பெருக்கிக் கொள்ளும் உள்ளமுமுடையாருடைய கேண்மை எமக்கு வேண்டா; தான் செய்யும் வேட்டத்தின்கண் மிக்க பசியுற்ற காலையும் இடம் வீழ்ந்ததை விடுத்து வலம் வீழ்ந்ததையே யுண்ணும் விறல் படைத்த புலிபோலும் மனமும் உரனமைந்த உள்ளமும் உடையவர் நட்புக்கலந்த வாழ்வே வேண்டுவதாம் என்று இசைத்துள்ளான். | விளைபதச் சீறிய நோக்கி வளைகதிர் வல்சி கொண்டளை மல்க வைக்கும் எலியமுயன் றனைய ராகி யுள்ளதம் வளன்வலி யுறுக்கு முளமி லாளரொ | 5 | டியைந்த கேண்மை யில்லா கியரோ | | கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென அன்றவ ணுண்ணா தாகி வழிநாட் பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந் திருங்களிற் றொருத்த னல்வலம் படுக்கும் | 15 | புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத் | | துரனுடை யாளர் கேண்மையொ டியைந்த வைக லுளவா கியரோ (190) |
திணையும் துறையு மவை. சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
உரை: விளை பதச் சீறிடம் நோக்கி - விளைந்த செவ்வியையுடைய சிறிய இடத்தைப் பார்த்து; வளை கதிர் வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் - வளைந்த கதிராகிய உணவைக் கொண்டு முழையின்கண்ணே நிறைய வைக்கும்; எலி முயன் றனையராகி - எலி முயன்றாற்போலும் சிறிய முயற்சியராகி; உள்ள தம் வளன் வலியுறுக்கும் உளமி லாளரொடு - உள்ள தம்முடைய செல்வத்தை நுகராது இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி யில்லாருடன்; இயைந்த கேண்மை இல்லாகியர் - பொருந்திய நட்பு இல்லையாக; கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந் தென - தறுகண்மையை யுடைய கேழலாகிய பன்றி தனது இடப்பக்கத்தே பட வீழ்ந்ததாக; அன்று அவண் உண்ணதாகி - அன்று அவ்விடத்து உண்ணாதாகி; வழி நாள் பெரு மலை விட ரகம் புலம்ப - பிற்றைநாள் பெரிய மலையின் கண் தனது முழையிடம் தனிமைப்பட; வேட்டெழுந்து - உணவை விரும்பி யெழுந்து; இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் - பெரிய களிறாகிய ஒருத்தலை நல்ல வலப்பக்கத்தே படப்படுக்கும்; புலி பசித் தன்ன - புலி பசித்தாற்போலும்; மெலிவில் உள்ளத்து உரனுடையாளர் கேண்மையொடு - குறையில்லாத மேற்கோளையுடைய வலியையுடையோர் நட்போடு; இயைந்த வைகல் உளவாகியர் - பொருந்திய நாட்கள் உளவாகுக எ-று.
சீறிட மென்றது, விளைந்து முற்றியபின் அறுப்பதற்கு முன்னாகிய இடத்தை இல்லாகியர், உளவாகியர் என்பன ஈண்டு வியங்கோட் பொருளவாய் நின்றன.
விளக்கம்: விளைந்து முற்றியபின் அறுப்பதற்கு முன்னாகிய இடம், அறுத்த சின்னாட்களில் மறுபடியும் உழப்பட்டு மாறிவிடுதல் பற்றி, சீறிடம் எனப்பட்ட தென்றார். தன் அளை நிறைய வைத்துக் கொண்ட தாயினும், அதற்கென்று உழைத்தவர் வேறாக, அவர துழைப்பின் பயனாக வந்த விளைவைத் தான் கவர்ந்து கோடலின், சிறிய முயற்சியென்றார். உள்ள மிகுதி - உள்ளத்தின் உயர்வு; மாந்தர்தம் உள்ளத்தனைய துயர்வு (குறள்.595) என்பது காண்க. உள்ளத்தில் மெலிவு இல்வழி, உயர்வும் அதனைச் செயற்படுத்தற்குரிய திண்மையும் ஒருங்குண்டாதலின், மெலிவில் உள்ளத் துரனுடையாளர் என்றார். புலி இடம் வீழ்ந்த துண்ணாது என்பதைப் பிற சான்றோரும், தொடங்கு வினை தவிரா வசைவி னோன்றாள் கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம் படின், வீழ்களிறு மிசையாப் புலி(அகம்.29) என்று கூறுதல் காண்க. |