120.வேள் பாரி பாரி மகளிரை நல்ல பாதுகாப்புடைய இடத்துக்குக் கொண்டேகும் கபிலர், பறம்பு நாட்டின் வளத்தைக் கண்டு, இனி இவ் வளஞ்சிறந்த நாடு, பாரி யிறந்தமையின் காப்பாரின்றிக் கெட்டழியும் போலும் என வருந்திப் பாடியுள்ளார். | வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற் கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப் பூழி மயங்கப் பலவுழுது வித்திப் பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக் | 5 | களைகால் கழலிற் றோடொலிபு நந்தி மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக் கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து கீழு மேலு மெஞ்சாமைப் பலகாய்த்து வாலிதின் விளைந்த புதுவர கரியத் | 10 | தினைகொய்யக் கவ்வை கறுப்ப வவரைக் கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக நிலம்புதைப் பழுனிய மட்டின் றேறல் புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப் | 15 | பெருந்தோ டாலம் பூசன் மேவர வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ இரும்பல் கூந்தன் மடந்தையர் தந்தை ஆடுகழை நரலுஞ் சேட்சிமைப் புலவர் பாடி யானாப் பண்பிற் பகைவர் | 20 | ஓடுகழற் கம்பலை கண்ட செருவெஞ் சேஎய் பெருவிற னாடே. (120) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை:வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல் - வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்து; கார்ப் பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்து - கார்காலத்து மழையான் மிகுந்த பெரிய செவ்வியையுடைய ஈரத்தின்கண்; பூழி மயங்கப் பல உழுது வித்தி - புழுதி கலக்கப் பல சால்பட வுழுது வித்தி; பல்லி ஆடிய பல்கிளைச் செவ்வி - தாளியடிக்கப்பட்ட பல கிளையையுடையசெவ்வியின்கண்; களை காழ் கழாலின் - களையை யடியினின்றும் களைதலான்; தோடு ஒலிபு நந்தி - இலை தழைத்துப் பெருகி; மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப - மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையை யொப்ப; நீடி - ஓங்கி; கருந் தாள் போகி - கரிய தண்டு நீண்டு; ஒருங்கு பீள் விரிந்து - எல்லாம் ஒருங்கு சூல் விரிந்து; கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து - கதிரினது அடியும் தலையும்ஒழியாமல் மிகக் காய்த்து; வாலிதின் விளைந்த - சீரிதாக விளைந்த; புது வரகு அரிய - புதிய வரகை யறுக்க; தினை கொய்ய - தினையையரிய; கவ்வை கறுப்ப - எள்ளிளங் காய் கறுப்ப; அவரைக் கொழுங் கொடி விளர்க்காய் கோட் பதமாக - அவரையினது கொழுவிய கொடியின்கண் வெள்ளைக் காய் அறுக்கும் செவ்வியாக; நிலம் புதைப்பழுனிய மட்டின் தேறல் - நிலத்தின்கட் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை; புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து - புல்லாலே வேயப்பட்ட சிறியமனையின்கண் குடியுள்ள இடந்தோறும் நுகரக்கொடுக்க; நறு நெய்க் கடலை விசைப்ப - நறிய நெய்யிலே கடலைதுள்ள; சோறு அட்டு - சோற்றை யட்டு ஊட்டுதற்கு; பெருந்தோள் தாலம் பூசல் மேவர - பெரிய தோளையுடைய மனையாள் கலம் பூசுதலைப் பொருந்த; வருந்தா யாணர்த்து - வருந்த வேண்டாத புதுவருவாயை யுடைத்து முன்பு; நந்துங் கொல் - இனியது கெடும் போலும்; இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை - கரிய பலவாகிய கூந்தலையுடைய மடந்தையர்களுக்குத் தந்தையாகிய; ஆடு மழை நரலும் சேட்சிமை - அசைந்த மூங்கில் இழைந்தொலிக்கும் உயர்ந்த உச்சியையுடைய; புலவர் பாடி ஆனாப் பண்பின் - புலவர் பாடப்பட்டமையாத தன்மையையுடைய; பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட - பகைவரது புறக்கொடுத்தோடும் வீரக் கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற; செரு வெஞ் சேஎய் பெருவிறல் நாடு - போரை விரும்பிய சேயை யொக்கும் பெரிய வென்றியை யுடையவனதுநாடு எ-று.
வித்தி ஆடிய செவ்வி யென இயையும். நந்தி யென்பது முதலாய வினையெச்சங்கள் விளைந்த வென்னும் பெயரெச்ச வினையோடும், அரிய வென்பது முதலாக மேவர வென்ப தீறாக நின்ற வினையெச்சங்கள் யாணர்த் தென்னும் குறிப்பு வினையோடும் முடிந்தன. பகர்ந் தென்பது பகர வெனத் திரிக்கப்பட்டது. விசைப்பச் சோறட்டு மேவர வென இயையும். செரு வெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங்கொல்லோ எனக் கூட்டுக. பெருந்தோ ளென்பது பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை வெப்புள் என வெம்மைக்கு அதுவும் ஒரு வாய்பாடாய் நின்றது. வெம்மை உள்ளும் முதிர்ந்த வெனினு மமையும்.
விளக்கம்:பல சால்பட வுழுதலால் நல்ல புழுதி தோன்றி எரு வேண்டாதே மிக்க பயனை விளைவிக்குமாதலின், பூழி மயங்கப் பலவுழுது என்றார்; தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும், வேண்டாது சாலப்படும் (குறள். உழவு-7) என்பர் திருவள்ளுவர். வரகுக் கொல்லைகளில் உண்டாகும் ஒருவகைக் களையைப் பல்லி யென்றே இக்காலத்தும் வழங்குகின்றனர். அது வரகுபோலவே இருப்பினும் பல் போலும் வெள்ளிய பூக்களையுடையதாகும். அவரையின் உள்ளிருக்கும் பரலை ஈண்டுக் கடலை யென்றார். தாலம் பூசல், அகன்ற கலமாகிய தாலத்தே சோற்றை வாங்கிப் பிசைந்துண்டல். புலவரது புல வெல்லையைக் கடந்த புகழுடையனாகலின், பாரியின் புகழ்க்குரிய பண்புகளை, புலவர் பாடியானாப் பண்பு என்றார். பகைவர் புறந்தந் தோடு மிடத்து, அவரது கம்பலை கண்டு, இத்தகைய மறமானமில்லாத மள்ளரொடு பொருதல் தன் மறமாண்புக் கிழுக்காதலின், பாரி நாணமுற்று, அவர் பின்னே செல்வ திலனாகலின், கம்பலை கண்ட செருவெஞ்சேய் என்றதற்கு, ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற செரு வெஞ்சேய் என்று உரை கூறினார். பெருந்தோளென்றது, அடையடுத்துநின்ற சினையிற் கூறும் முதலறி கிளவி; அற்றாயினும் உரைகாரர், தொடர்மொழியாகக் கொண்டு, பெருந்தோளையுடையாளென விரித்தலின், பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை யென்றார். |