173. சிறுகுடிகிழான் பண்ணன்

     சிறுகுடி யென்பது, சோழநாட்டில் காவிரிக்கரையில் இருந்ததோர் ஊர்.
இச் சிறுகுடியில் வாழ்ந்த வேளாளர்  தலைவன்  இப்  பண்ணன்.   இவன்
போராண்மையும்  கைவண்மையும்  மிக வுடையவன். புலவர் பாடும் புகழ்
பெற்ற  இவனை    மாற்றூர்  கிழார்   மகனார்  கொற்றங்கொற்றனார்,
கோவூர்கிழார்,   செயலூர்  இளம்பொன்  சாத்தன்   கொற்றனார், மதுரை
அளக்கர்  ஞாழார்  மகனார் மள்ளனார் என்ற  சான்றோர்கள் பெரிதும்
பாராட்டிப் பாடியிருக்கின்றனர். “தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்
பண்ணன்”(அகம்.54)    எனக்    கொற்றங்கொற்றனாரும்,    இவனது
பேராண்மையை   வியந்து,   “வென்வேல் இலைநிறம் பெயர வோச்சி
மாற்றோர்”மலைமருள் யானை மண்டம ரொழித்த, கழற்கால் பண்ணன்”
(அகம்.177) என்று செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனாரும் கூறுவர்.
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், ஒருகால் இவனைக் காணச்
சென்றபோது இவன் ன அவரது “இடுக்கண் இரியல் போக”(புறம். 388)
தான்   உடையவற்றை   நிரம்பக்   கொடுத்துக்  கொடை  மேம்பட்டான்.
இப்பண்ணனுக்கும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்கும்
நெருங்கிய நட்புண்டு. இக்கிள்ளிவளவனைக் காணச் சென்ற கோவூர்கிழார்,
அவன் இரவலர்க்கு வழங்கும் கொடை நலத்தைப் பாராட்டலுற்றுச் சிறுகுடி
கிழான் பண்ணன் பால் அவன் கொண்டிருந்த நட்பு நலத்தையும் உடன்
கூட்டி,  “கைவள்ளீகைப் பண்ணன் சிறுகுடி” (புறம்.70)  என்று  
பாராட்டியுள்ளார். பண்ணன் சிறு குடிக்கு வடக்கே கான்யாறும் தண்ணீர்க்
கயமும் இருந்தன. அவையும் சான்றோர்களால் குறிக்கப்பட்டுள்ளன.

     சோழ வேந்தனான குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நோக்க,
சிறுகுடி கிழான் பண்ணன் எளியனாயினும், அவ்வளவன் இப்பண்ணனிடம்
கொண்டிருந்த அன்புறு நட்புப் பண்ணனை ஓர் இனிய தமிழ்ப் பாட்டால்
பெரிதும் பாடிப் பரவச் செய்துள்ளது. “இனையர் இவர் எமக்கு இன்னம்யா
மென்று,  புனையினும்   புல்லென்னும் நட்பு”   (குறள்.790)  என்பதை
நன்குணர்ந்தவனாகலின், இச் சிறுகுடி கிழானான பண்ணன் தன்பொருட்டு
மாற்றோருடைய மலைபோலும் யானைகளைப் போரிற் கொன்று சிறந்த மறப்
பண்பினையோ, தன்பாற் கொண்ட அன்பினையோ எடுத் தோதாது,
அவனது  கொடை    நலத்தையே      விதந்தோதுமாற்றால்    தன்  
உள்ளன்பினை வெளிப்படுத்தக் கருதி இப்பாட்டினைப் பாடினான்.
பாடியவன் அதனையும் தன் கூற்றாகக் கூறாது பாணனொருவன் கூற்றில்
வைத்துப் பாடியுள்ளான்.

     இதன்கண், பண்ணன்பால் பரிசில் பெறப் போகின்ற பாணனொருவன்,
சிறுகுடியை யணுகிய அளவில், பண்ணன்பால் பரிசில் பெற்று வரும் பாணர்
சிலரைக்     காண்கின்றான்.     அவர்கள்    பண்ணனை வாழ்த்திக்
கொண்டு வருகின்றனர். அவர்களை ஒன்று வினாவக் கருதி, “யான் வாழும்
நாளும் பண்ணன் வாழ்வானாக”என்று வாழ்த்திப், பரிசில் பெற்ற
பாணர்களே, இப் பாணனது  சுற்றம் எய்தி வருந்தும் வருத்தத்தைக்
காண்மின்;   பண்ணன்  மனையிலுண்டாகும்  ஊணொலி  யரவமும்
கேட்கிறது; எறும் பொழுக்குப் போல இளஞ்சிறார்கள் சோறுடைக் கையராய்
வேறு வேறாகப் போவதையும் காண்கின்றோம்;  இவற்றைக்  கேட்டும்  
கண்டும் அமையாது கடும்பினது வருத்தம்  மிகுதலால்,  பசிப்பிணி
மருத்துவனாகிய பண்ணனது இல்லம் அணித்தோ  சேய்த்தோ கூறுமின்    
எனப் பலகாலும் கேட்கின்றோம்; எங்கட்குச் சொல்லுங்கள்”என்று
கேட்கின்றான்.

யான்வாழு நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை
யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன
ஊணொலி யரவந் தானுங் கேட்கும்
5 பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
 முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும்
10மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப்
 பசிப்பிணி மருத்துவ னில்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே. (173)

     திணையும் துறையு மவை. சிறுகுடி கிழான் பண்ணனைச்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.

    உரை: யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய - யான் உயிர்
வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக; பாணர் பாணரே;
காண்க இவன் கடும்பினது இடும்பை - காண்பீராக இந்தப்
பரிசிலனது சுற்றத்தினது  வறுமையை;  யாணர்ப்  பழு மரம் - புது
வருவாயை யுடைத்தாகிய பழுத்த மரத்தின் கண்ணே; புள் இமிழ்ந்
தன்ன - புள்ளினம் ஒலித்தாற் போன்ற; ஊன் ஒலி அரவந்தானும்
கேட்கும் - ஊணாலுண்டாகிய ஆரவாரந்தானும் கேட்கும்; பொய்யா
எழிலி பெய்விடம் நோக்கி - காலந்தப்பாத மழை பெய்யுங்
காலத்தைப் பார்த்து; முட்டை கொண்டு வற்புலம் சேரும் - தம்
முட்டைகளைக் கொண்டு  மேட்டு  நிலத்தினை  யடையும்;  சிறு
நுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்ப - மிகச் சிறிய எறும்பினது
சிலவாகிய ஒழுக்கத்தை யொப்ப; சோறுடைக்கையர் -
சோறுடைக்கையினராய்; வீறு  வீறு  இயங்கும் - வேறு  வேறு
போகின்ற;  இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் - பெரிய
சுற்றத்தாரோடும் கூடிய பிள்ளைகளைக்காண்பேம்; கண்டும் மற்றும்
மற்றும் வினவுதும் - கண்டு வைத்தும் எம் பசி வருத்தத்தானும் வழி
வரல் வருத்தத்தானும் பின்னரும் பின்னரும் விதுப்புற்றுக்
கேளாநின்றேம்; தெற்றென - தெளிய; பசிப்பிணி மருத்துவன் இல்லம்
- பசி நோய் தீர்க்கும் மரு்துதுவனது மனை; அணித்தோ சேய்த்தோ -
அணித்தோ தூரிதோ; எமக்குக் கூறுமின் - எங்களுக்கு நீர்
சொல்லுமின் எ-று.

     காண்க இவனென்பது, காண்கிவ னெனக் கடைக்குறைந்து நின்றது.
தானென்பது அசைநிலை. இது பரிசில் பெறப்போகின்றான் வருகின்றவரைக்
கண்டு வினவுவான் பண்ணனது இயல்புகூறி வாழ்த்தியவாறு. இனி, பரிசிலன்
தான், அரவமும் கேட்கும்; சிறாரைக் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும்
வினவுதும்; நீர் எமக்குப் பசிப்பிணி மருத்தவன் இல்லம் அணித்தோ
சேய்த்தோ கூறுமின் என்னாநின்றான்; இவன் கடும்பினது இடும்பையைப்
பாணர் காண்க; இங்ஙனம் எம்போலும் இரவலர் வறுமையைத் தீர்க்கின்ற
பண்ணன் வாழிய வென்று பெறப் போகின்றானைக் கண்டு பெற்று
வருகின்றான் பக்கப் பாணரை நோக்கிக் கூறியதாக வுரைப்பினு மமையும்.
இதற்கு என்னா நின்றானென ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது.

     அன்றியும், பரிசிற்குச் செல்கின்றான், பசிப்பிணி மருத்துவ னில்லம்
அணித்தோ சேய்த்தோ வென்று பலகாலும் வினவ, அதனை யுட்கொண்டு
ஊணொலி யரவமும் கேட்கும்; இருங்கிளைச் சிறார்க் காண்டும்; கண்டும்
மற்றும் மற்றும் வினவுது மெனச் சாதியொருமையா லுளப்படுத்திக் கூறிப்
பின்பு, இங்ஙனம் காணவும் கேட்கவும் படுவது நுமக்கு ஏற அணித்தோ
சேய்த்தோ கூறுமின் எமக்கென்று அவரை நோக்கி கூறிப், பின்பு இங்ஙனம்
என் வறுமையும் தீர்த்து, இவன் வறுமையும் தீர்க்க விருக்கின்ற பண்ணன்
யான் வாழும் நாளும்பெற்று வாழ்வானாக வெனப் பரிசில் பெற்று
வருகின்றான் தன் பக்கப் பாணரை நோக்கிக் கூறியவாறாக வுரைப்பாரு
முளர். இனி, செல்கின்ற பக்கப் பாணருள் ஒருவன் ஆண்டு நிற்கின்ற
பாணன் பக்கப்பாணரை நோக்கிக் கூறியதாக வுரைப்பாரு முளர். ஈண்டும் 
இவனென்றது பரிசிலனை. மற்றும் மற்றும் வினவுந் தெற்றென
என்றுபாடமோதுவாரு முளர்.

    விளக்கம்: மரம் பழுத்த விடத்துப் புள்ளினம் தத்துங் கிளையோடு
போந்து  கனியுண்டு களித்து ஆரவாரித்தல் இயல்பாதலின், “யாணர்ப்
பழுமரம்  புள்ளிமிழ்ந்தன்ன  வூணொலி யரவம்”என்றார்; “கனிபொழி
கானங்  கிளையொ  டுணீஇய,  துனைபறை  நிவக்கும்  புள்ளினம்”
(மலைபடு.54-5)  என்பது  காண்க. எறும்பினம் தரையிலுள்ள அளைகளில்
வாழ்வன  வாதலாலும், மழைபெய்து  விடின், அளைக்கண் நீர் புக்கு
அவற்றின்    முட்டைகளைச்   சிதைக்குமாகலானும், மழை  வரவு  
காட்டும் காற்றினைக் கொண்டு அறிந்து மேட்டிடத்து அளைகளில் தம்
முட்டைகளைக் கொண்டு சேர்க்கும் இயல்பினவாம். யானைகள் தம்
முடற்பெருமை குறித்துத் தம்முள் அணிவகுத்துச் சேறல் போல,
எறும்புகளும் தம் மினப் பன்மை குறித்துச் சாரை சாரையாய்
ஒழுங்குகொண்டு செல்லும் இயல்பினவாம். பெய்யா வெழிலியென்று
பாடமாயின், அதற்கு எறும்பு முட்டை கொண்டேகுங் காலத்துப்
பெய்யாததுபோல் தோன்றும் எழிலி யெனக் கூறினும் அமையும். பெய்விடம்
என்ற விடத்து இடம் காலம் குறித்து நின்றது. வன்புலத்தில் நீர்
அளைகளில் சுவறாதாகலின், “வற்புலம் சேரும்”என்றார். பசியை
நோயென்றும், உணவை மருந்தென்றும் வழங்குமாறுபற்றி, உணவு வழங்கும்
பண்ணனை, “பசிப்பிணி மருத்துவன்”என்றார். விதுப்பு,
விருப்பத்தாலுண்டாகும் உள்ளத் துடிப்பு. “இவன் கடும்பினது இடும்பை
காண்க”என்றானாகலின், அதற்கேற்பக் “கண்டும் மற்றும் வினவுது”மாகலின்,
“தெற்றென எமக்குக் கூறுமின்”என்றான். பசியை நோயென்றும், உணவை
மருந்தென்றும் வழங்குமாறுபற்றி, உணவு வழங்கும் பண்ணனை, “பசிப்பிணி
மருத்துவன்” என்றார். விதுப்பு, விருப்பத்தாலுண்டாகும் உள்ளத் துடிப்பு.
“இவன் கடும்பினது இடும்பை காண்க” என்றானாகலின், அதற்கேற்பக்
“கண்டும் மற்றும் மற்றும் வினவுது” மாகலின், “தெற்றென எமக்குக்
கூறுமின்” என்றான். அணித்தோ சேய்த்தோ கூறுமின் என்னாநின்றான்
என்பதில் என்னாநின்றா னென ஒருசொல் வருவித்துப் பாணன் கூற்றினை
முடித்தல் வேண்டிற்று. அதனால், “இதற்கு........உரைக்கப்பட்ட”தென்றார்.
பக்கப்பாணரை நோக்கிக் கூறுமிடத்து, “காண்க இவன்”என்றவித்து, இவன்
என்றது பரிசிலனையாதலின், “ஈண்டும்........பரிசிலனை”என்றார். ஈண்டுக்
காட்டப்படும் உரை வேறுபாடுகள் அனைத்தும் பொருள் வகையில்
பொருத்தமுடையவே.