18. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்

     இப் பாண்டியனது   இயற்பெயர்   நெடுஞ்செழியன்   என்பது.
லையாலங்கானம்  என்னுமிடத்தே  தன்னை   யெதிர்த்த   முடிவேந்தர்
இருவரும் வேளிர்  ஐவருமாகிய  எழுவரை   வென்று   மேம்பட்டது
கொண்டு தலையாலங்கானத்துச்  செருவென்ற  நெடுஞ்செழியன்  எனச்
சிறப்பிக்கப்பட்டான். மாங்குடி  மருதனார்  முதலிய  சான்றோரிடத்தே
பெருமதிப்பும் அன்பும் உடையவன். அவர்  பாடிய மதுரைக்காஞ்சிக்கும்
தலைவன் இவனே.  யானைக்கட்சேய்  மாந்தரஞ்சேர  லிரும்பொறையை
வென்று சிறைப்படுத்தியதும், வேள் எவ்வியின்  மிழலைக்  கூற்றத்தையும்
முதுவேளிர்கட்குரிய முத்தூர்க்கூற்றத்தையும் வென்று தான் கைப்படுத்திக்
கொண்டதும் இவனுடைய போர்ச்  செயல்களாகும். தன்னை  யெதிர்த்த
வேந்தரொடு  பொரச்  சென்றபோது இவன் வழங்கிய வஞ்சினப்பாட்டு
இத்தொகைநூற்கண்  உள்ளது.  இவனைக்   குறுங்கோழியூர்   கிழார்,
குடபுலவியனார், கல்லாடனார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார்
முதலியோர்  பாடியுள்ளனர்.    இவனைப்   பாண்டியன்    நெடுஞ்
செழியனென்றும் கூறுவர். இவன் வேறு; கோவலனைக் கொலைபுரிவித்த
நெடுஞ்செழியன் வேறு.

     குடபுலவியனார்   என்னும்    சான்றோர்    இப்பாண்டியனை
இப்பாட்டாலும் வரும் பாட்டாலும் சிறப்பித்துப் பாடுகின்றார். புலவியன்
என்பது இவரது   இயற்பெயர். குடநாட்டவராதலால்,  குடபுலவியனார்
எனப்பட்டார். புலவியன்  என்பது  விரிந்த  அறிவுடையவனென்னும்
பொருள்பட   வருந்  தமிழ்ச்  சொல்லாதலால்,   புலத்தியனென்னும்
வடசொற்றிரிபெனக் கூறுவது மடமையாகும்.

     இப்  பாட்டின்கண்,   தாம்   பாண்டிநாட்டின்  மேற்குபகுதியில்
வாழ்பவராதலாலும்,  அப்பகுதி  நீர்நிலையின்றி  விளைநிலம்   குன்றி
வாடுதலாலும், நீர்நிலை பெருக அமைக்க வேண்டுமெனப்  பாண்டியற்
குணர்த்தக் கருதி “வயவேந்தே, நீ மறுமைப்பேறாகிய துறக்க வின்பம்
வேண்டினும், இம்மைக்கண் உரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும்,
நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி  வானோக்கும்
புன்புலம் வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாது; ஆகவே நீர்நிலை
பெருக   அமைப்பாயாக”  வென   வற்புறுத்துகின்றார்.  அரசன்பால்
பொருள்வளம் குன்றாது மேன்மேலும் பெருகுதற்குரிய செயன்முறைகளை
அவர்கட்கு   அறிவுறுத்துவது   கடமையாகும்.   ஆதலால்,   ஈண்டுக்
குடபுலவியனார், நாடு வளம் மிகுவது குறித்து நீர்நிலை பெருகச் செய்க
என  அறிவுறுத்துகின்றார்.  சேரமான் கோதை யென்பாற்குத் தானைத்
தலைவனான பிட்டங்கொற்றனென்பான் மாறுபடும் மன்னரை வென்று
அவர் தரும் பொருள் வளத்தைப் புலவருக்கு நல்கிப் புகழ்பெறக் கண்ட
வடம வண்ணக்கன் தாமோதரனார் என்னும் சான்றோர், அவனது பொருள்
வளம் குன்றாமை வேண்டி, “வயமான் பிட்டன் ஆரமர் கடக்கும் வேலும்
அவன் இறைமாவள்ளீகைக் கோதையும், மாறுகொள் மன்னரும் வாழியர்
நெடிதே” (புறம்:172) என்று வாழ்த்துவது இக்கருத்தை நாம் நன்கு தெளிய
வற்புறுத்துகின்றது.

  முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
5.ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய
 பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
நுண்ணாரற் பருவராற்
10. குரூஉக்கெடிற்ற குண்டகழி
  வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
15. ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த
 நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
20. உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
  உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
25.வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
 இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
30. தள்ளா தோரிவட் டள்ளா தோரே. (18)

     திணை : பொதுவியல்; துறை: முதுமொழிக்காஞ்சி. பாண்டியன்
நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

     உரை: முழங்கு  முந்நீர்  முழுவதும்  வளைஇ  - ஒலிக்கின்ற
கடலானது முழுவதும் சூழப்பட்டு; பரந்து பட்ட வியன் ஞாலம் -
பரந்து
கிடக்கின்ற அகன்ற வுலகத்தை;தாளின் தந்து-தமது முயற்சியாற்
கொண்டு; தம் புகழ் நிறீஇ - தம்முடைய புகழை யுலகத்தின் கண்ணே
நிறுத்தி; ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல் - தாமே ஆண்ட
வலியோருடைய வழித்தோன்றினோய்; ஒன்று பத்து அடுக்கிய கோடி
கடை இரீஇய - ஒன்றைப் பத்து முறையாக அடுக்கப்பட்டதாகிய
கோடி யென்னும் எண்ணினைக் கடையெண்ணாக இருத்திய;
பெருமைத்தாக நின் ஆயுள் - சங்கு முதலாகிய பேரெண்ணினை
யுடைத்தாக நினது வாழ்நாள்; நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சி - நீரின்
கண்ணேயுறத் தாழ்ந்த குறிய காஞ்சியினது; பூக் காதூஉம் இன
வாளை - பூவைக் கவரும் இனமாகிய வாளையினையும்; நுண்ணாரல்-
நுண்ணிய ஆரலினையும்; பருவரால் - பரிய வராலினையும்; குரூஉக்
கெடிற்ற - நிறமுடைய கெடிற்றினையு முடைத்தாகிய; குண்டு அகழி-
குழிந்த கிடங்கினையும்; வான் உட்கும் வடி நீண் மதில் - வான
மஞ்சும் திருந்திய நெடிய மதிலையு முடைத்தாகிய; மல்லல் மூதூர்
வயவேந்தே - வளவிய பழைய ஊரினையுடைய வலிய வேந்தே;
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் - நீ போகக் கடவ
மறுமை யுலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினும்; ஞாலம்
காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும் -
உலகத்தைக் காப்பாரது தோள் வலியைக் கெடுத்து நீ ஒருவனுமே
தலைவனாதலை விரும்பினும்; சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும்
- மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே நிறுத்துதலை விரும்பினும்;
அதன் தகுதி கேள் இனி - அவ் வேட்கைக்குத் தக்க
செய்கையைக்கேட்பாயாக இப் பொழுது - மிகுதியாள - பெரியோய்;
நீர் இன்று அமையா யாக்கைக்கெல்லாம் - நீரை யின்றியமையாத
உடம்பிற்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் -
உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார்; உண்டு முதற்று
உணவின் பிண்டம் - உணவை முதலாக வுடைத்து அவ்வுணவா
லுளதாகிய உடம்பு; உணவெனப் படுவது நிலத்தொடு நீர் - ஆதலால்
உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்; நீரும் நிலனும்
புணரியோர் - அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள்;
ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோர் - இவ்வுலகத்து
உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்; வித்தி வான் நோக்கும்
புன் புலம் - நெல் முதலாய வற்றை வித்தி மழையைப்
பார்த்திருக்கும் புல்லிய நிலம்; கண்ணகன் வைப்பிற் றாயினும் - இட
மகன்ற நிலத்தையுடைத்தாயினும்; நண்ணி யாளும் இறைவன் தாட்கு
உதவாது - அது பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப்
பயன்படாது; அதனால் - ஆதலால்; அடு போர்ச் செழிய -
கொல்லும்  போரையுடைய செழிய; இகழாது - இதனைக்
கடைப்பிடித்து; வல்லே - விரைந்து; நிலன் நெளி மருங்கின் - நிலம்
குழிந்த
விடத்தே; நீர் பெருகத்  தட்டோர்-நீர்நிலை மிகும்   பரிசு
தளைத்தோர்; இவண் தட்டோர் - தாம் செல்லு முலகத்துச் செல்வ
முதலாகிய   மூன்றினையும்   இவ்வுலகத்துத்    தம்    பேரோடு
தளைத்தோராவர்; தள்ளாதோர் - அந் நீரைத் தளையாதவர்; இவண்
தள்ளாதோர் - இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளையாதோர் எ-று.

     இதனால் நீயும் நீர்நிலை பெருகத் தட்கவேண்டுமென்பது கருத்தாகக்
கொள்க. மற்றும் அம்மவும் அசைநிலை.   உணவின்  பிண்டம்  உண்டி
முதற்றாதலான், உண்டி கொடுத்தோர்  உயிர்  கொடுத்தோரென  மாறிக்
கூட்டுக. தள்ளாதோர் இவண் தள்ளாதோ  ராதலால்,  செழிய,  இதனை
இகழாது  வல்லே  செய்யென  ஒருசொல்   வருவித்துரைப்பாரு  முளர்.
தட்டோரென்பதற்குத் தம் பெயரைத் தளைத்தோ ரெனினு மமையும்.

     நீரும் நிலனும் புணரியோர் உயிரும் உடம்பும் படைத்தோரெனவே,
செல்லு முலகத்துச் செல்வமும், வித்திவானோக்கும் புன்புலம் இறைவன்
தாட் குதவாதெனவே,நீர்நிலை பெருகத் தட்டலால் வானோக்கவேண்டாத
நன்புலம்   இறைவன்  தாட்கு  உதவி  ஞாலங்  காவலர்   தோள்வலி
முருக்குதலும், நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் இவண்
தட்டோ ரெனவே,நல்லிசை நிறுத்தலும் கூறப்பட்டன.

     நீர்நிலை   பெருகத்  தட்கவே  அறன்  முதன் மூன்றும் பயக்கு
மென்பது கூறினமையான் இது முதுமொழிக் காஞ்சியாயிற்று.  

      விளக்கம்:முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்து பட்டஞாலம் என்று
இயைதலால்,வளைஇயென்பதற்குச் சூழப்பட்டு  என்று  பொருளுரைத்தார். 
புகழ் நிறீஇ  யென்றவிடத்து,புகழ்க்கு ஆதாரம் உலக மாதலின், “புகழை
யுலகத்தின்கண்ணே நிறுத்தி” யென்றார்; “சிறந்த   நல்லிசை   நிறுத்த
வேண்டினும்” என்றவிடத்தும் இவ்வாறு உரை கூறுதல் காண்க. இருந்து
ஆளும் உலகம் நிலவுலகமாதலால்,செல்லு முலகம் மறுமை யுலகமாயிற்று.
ஞாலங் காவலர் -  ஞாலம்   காக்கும்  வேந்தர்.  உடம்பு  உணவால்
வளர்தலின்,உணவின் பிண்டமெனப் பட்டது. “மக்கள் யாக்கை யுணவின்
பிண்டம்” (10:90) என மணிமேகலை யாசிரியரும் கூறுவர்.புணர்த்தவரைப்
“புணரியோர்” என்றார். புணர்த்தல், கூட்டுதல்; அஃதாவது நீர் இல்லா
நிலத்தில் நீர்நிலை யுண்டு பண்ணுதல். ஆறு, ஏரி, குளம் முதலியவற்றால்
நீர் வருவாயின்றி மழை வருவா யொன்றையே நோக்கி நிற்கும் புன்செய்
நிலத்தை “வானோர்க்கும் புன்புலம்” என்றார்.இக்காலத்தும் இந்நிலங்களை
“வானவாரி” யென்பர். தாள், முயற்சி; வெற்றிச் சிறப்பால் பகை களைந்து
செல்வம் பெருகுவிக்கும் அரசியல் முயற்சி. இயல்பாகவே ஆழ்ந்திருக்கும்
நிலப்பகுதி தேர்ந்து நீர்நிலை யமைத்தல் இயல்பாதலால், “நிலன் நெளி
மருங்கு” என்றார். மூன்றுமாவன, செல்லு முலகத்துச் செல்வம், ஞாலங்
காவலர்  தோள்வலி  முருக்குதல்,   நீர்நிலை   பெருகத்   தளைத்தல்.
“வித்திவானோக்கும்   புன்புலம்  இறைவன்  தாட்கு  உதவாது” என்ற
இவ்வுண்மையை இகழாது என இவ்வுரைகாரர் கூறியது போலாது, “இகழாது
வல்லே செய்” என ஒருசொல் வருவித்துரைத்தலு முண்டு. களைதல்,கட்டல்
என வருதல்போலத் தளைத்தல் தட்டல் என வந்தது. நிலனெளி மருங்கில்
நெடிய நீண்ட கரையெடுத்து  நீரைத் தேக்கி வேண்டுமளவிற்  பயன்படுமாறு
கட்டிவைத்தலைத் தளைத்தல் என்கின்றார். உயிரும் உடம்பும் படைத்தல்
அறம்; வேந்தர் தோள்வலி முருக்குதல் பொருள்; நல்லிசை நிறுத்தல்
இன்பம்இவ்வகையால் அறமுதல் மூன்றும் கூறப்பட்டனவாம்.