65. சேரமான் பெருஞ் சேரலாதன்

     இச் சேரலாதன் பெயர் சில ஏடுகளிற் பெருந்தோளாதன் என்று
காணப்படுகின்றது. இவன் மிக்க வீரமும், சான்றோர் பாடும் சால்பு முடையன்.
குடக்கோ நெடுஞ்சேரலாதன் இவற்குமுன் தோன்றிக் குறுகிய காலத்தில் உயிர்
துறந்தான். இவ்விருவர் காலத்தும் கழாத் தலையார் இருந்தார்; இருவர்பாலும்
அவர் சிறந்த நன்மதிப்புடையராய்ப் பாடியுள்ளார். இச் சேரமான்
சோழநாட்டை யாண்ட கரிகால்வளவனொடு வெண்ணியென்னு மிடத்தே
பெரும்போர் செய்தான். அப் போரில் பாண்டிவேந்த னொருவனும் போர்
உடற்றினன்.இதன்கண் வளவன் செலுத்திய நெடுவேல் இச் சேரமான் மார்பிற்
பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. மார்பினும்
முகத்தினும் பட்ட புண்ணையே வீரர் விழுப்புண் ணென விரும்புவர்.
மார்பிற்பட்ட கருவியால் முதுகிடத்தும் இச் சேரமானுக்குப்
புண்ணாயினமையின், இவன் அதனால் பெரு நாணம் கொண்டு மானம்
பொறாது வடக்கிருப் பானாயினன்.

இச்செய்தி தமிழ் நாடெங்கும் பரவிற்று. கேள்வியுற்ற ஏனை யரசரும்
சான்றோரும் இவன்பால் பெருமதிப்புற்றுப்   பாராட்டுவா ராயினர்.
கழாத்தலையாராகிய சான்றோர், இவன் செயல் கண்டு, ஆற்றாமை மிகக்
கொண்டு, தன்போலும் வேந்தனொருவன் மார்பு குறித்தெறிந்த
படையாலுண்டாகிய புறப் புண்ணிற்கு நாணி மறத்தகை மன்னனாகிய எங்கள்
பெருஞ்சேரலாதன் வாள் வடக்கிருந்தனன்; எங்கட்கு இனி ஞாயிறு விளங்கும்
பகற்போது முன்போலக் கழியாது; உழவர் உழவு மறப்பர்; சீறூர்களும்
விழாவை மறக்கும்; இவனது வடக்கிருப்பு உவாநாளில் ஞாயிறுதோன்றத்
திங்கள் மலைவாய் மறைவதுபோல வுளது. அஃதாவது, தமிழ் நாட்டின்
மேலைப் பகுதியில் இனி இருள் சூழ்வதன்றி ஒளியில்லையாம்” என்று
இப்பாட்டின்கண் கையறவுற்றுக் கலுழ்ந்து பாடியுள்ளார். மாமூலனார் என்னும்
சான்றோர், இவன் வடக்கிருந்து உயிர் துறந்தன ரெனக் கூறுகின்றார்.

மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச்
சுரும்பார் தேறல் சுற்ற மறப்ப
உழவ ரோதை மறப்ப விழவும்
5. அகலு ளாங்கட் சீறூர் மறப்ப
உவவுத்தலை வந்த பெருநா ளமயத்
திருசுடர் தம்மு ணோக்கி யொருசுடர்
புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த
10.புறப்புண் ணாணி மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தன னீங்கு
நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே.(65)

     திணை: பொதுவியல் துறை:கையறுநிலை.சேரமான்பெருஞ்
சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருது
புறப்புண்ணாணி வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.

     உரை:முழா மண் மறப்ப - முழா மார்ச்சனை யிடுத லொழிய;
யாழ்பண் மறப்ப - யாழ் பண்ணை யொழிய; இருங்கண் குழிசி
கவிழ்ந்து இழுது மறப்ப - பெரிய இடத்தையுடைய பானை
பாலின்மையிற் கவிழ்ந்து நெய் கடைதலை யொழிய; சுற்றம் சுரும்பார்
தேறல் மறப்ப - தம்முடைய கிளை வண்டார்ந்த மதுவை யுண்ணா
தொழிய; உழவர் ஓதை மறப்ப - உழுவார் தொழில் செய்யு மோசையை
யொழிய; அகலுள் ஆங்கண் சீறூர் விழவும் மறப்ப - அகன்ற
தெருவினையுடைய சீறூர் விழாவினை யொழிய; உவவுத் தலைவந்த
பெரு நாள் அமையத்து - உவாவந்து கூடிய பெரிய நாளாகிய
பொழுதின்கண்; இரு சுடர் தம்முள் நோக்கி - ஞாயிறுந் திங்களுமாகிய
இரு சுடரும் தம்முள் எதிர்நின்று பார்த்து; ஒரு சுடர் புன்கண் மாலை
மலை மறைந்தாங்கு - அவற்றுள் ஒரு சுடர் புல்லியமாலைப்
பொழுதின்கண் மலையுள்ளே யொளித்தாற்போல; தன் போல் வேந்தன்
முன்பு குறித்தெறிந்த புறப்புண் நாணி - தன்னை யொக்கும் வேந்தன்
முன்னாகக் கருதி யெறிந்த புறத்துற்ற புண்ணுக்கு நாணி; மறத்தகை
மன்னன் வாள் வடக் கிருந்தனன் - மறக் கூறுபாட்டையுடைய வேந்தன்
வாளோடு வடக்கிருந்தான்; ஈங்கு ஞாயிற்றுப் பகல் - நாள்போற்கழியல
- ஆதலால், இவ்விடத்து யாம் அவனை யின்றித் தனித்து உயிர்வாழும்
ஞாயிற்றையுடைய பகல் எமக்கு இனி முன்பு கழிந்த நாள் போலக்
கழியா எ-று.


     மண் முழாமறப்ப வென்று முதலாகிய செயவெனெச்சங்க ளெல்லாம்
வாள் வடக்கிருந்தன னென்னும் வினையோடு முடிந்தன. எறிந்த புண் -
எறிதல் ஏதுவாக வுற்ற புண். முன்பு குறித்தெறிந்த புறப்புண் ணாணி யென்றது,
மார்பில் தைத்துருவின் புண்ணும் புறப்புண்ணாதலை யொக்கு மென நாணி
யென்றதாகக் கொள்க.

     விளக்கம்: முழாவை மண்ணுதலாவது மார்ச்சனையிடுதல். குழிசி இழுது
மறப்ப வென்றதனால், குழிசி யிடத்தே கடைந்தெடுக்கப்படும் இயைபு கருதி,
நெய் கடைதல் பொருள் கூறப்பட்டது. இழுது - நெய்; இன்றும் மலைநாட்டவர்
உருக்காத நெய்யை இழுது என்ப. அரசர் குடியில் இழவுண்டாயின் ஊர்களில்
எடுக்கப்படும் விழா கைவிடப்படும். திரையனை இழந்து வருந்தியதனால்
காவிரிப்பூம்பட்டினம் இந்திர விழாவை மறந்த செய்தி மணிமேகலையால்
உணர்ந்து கொள்க. கரிகாலனொடு பொருத காலத்தில் சேரமான் முதுகிடாது
நேர் நின்று பொருதானென்றும், அவன் மார்பு குறித்தெறிந்த கரிகாலன்
வேல் அவனது மார்பிற் பட்டு முதுகிடத்தே புண்ணாக்கிற் றென்றற்கு, “முன்பு
குறித்தெறிந்த புறப்புண்” என்றார். உவாநாளில் இருண் மாலைப்போதில்
கிழக்கே திங்கள் தோன்ற, மேற்கே ஞாயிறு மலைவாய் மறையுமாறு தோன்ற,
“ஒருசுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்கு” என்றார்.