மலர் மிசை யேகினான் மாண்அடி சேர்ந்தார் - அடி யாரின் உள்ளத்தாமரை மலரின் கண்ணே அவர் நினைந்த மட்டில் விரைந்து சென்றமரும் இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை அடைந்தவர்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா வுலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வார். மலர் என்னுஞ்சொல் தனித்துநின்று மனத்தைக் குறியாமையாலும், ஏகினான் என்னுஞ் சொல்லாட்சியாலும், மலர்மிசையேகினான் என்பது இயல்பாக இறைவன் பெயராதற்கு ஏற்காமையாலும், 'பூமேல் நடந்தான்' என்னும் அருகன் பெயரையே ஆசிரியர் இறைவனுக்குப் பொருந்துமாறு ஆண்டார் என்பது தெரிகின்றது. "மலர்மிசை நடந்தோன்" என்று இளங்கோவடிகளும் கவுந்தி யடிகள் கூற்றாகக் கூறுதல் காண்க (சிலப். 10:204.). சமணர் தம் பொய்யான சமயத்தை விட்டுவிட்டு மெய்யான கடவுளை வணங்க வேண்டுமென்பது இக்குறளின் உட்குறிப்பு. அடியாரின் உள்ளத்தாமரை நோக்கி ஏகுவானை ஏகினான் என்று இறந்தகால வாய்பாட்டாற் கூறியது, விரைவு பற்றிய கால வழுவமைதி . அடிசோர்தல் - இடைவிடாது நினைத்து அதற்கேற்ப ஒழுகுதல்.
|