அஞ்சும்-போருக்கு அஞ்சுபவனாகவும்; அறியான்-அறியவேண்டியவற்றை அறியாதவனாகவும்; ஈகலான்-ஈகைத் தன்மையில்லாதவனாகவும் இருப்பவன்; பகைக்குத் தஞ்சம் எளியன்-தன்பகைவர்க்கு மிக எளியவனாவான். இந்நான்கு நிலைமைகளுள் ஒன்றிருப்பினும் தோல்விக் கேதுவாயிருக்க, நாலும் ஒன்று சேரின் தோல்வியுறுதல் முழுவுறுதியும் மிக எளிதாய் நேர்வதுமாதலின் 'தஞ்சமெளியன்' என்றார். 'தஞ்சம்' எளிமைப் பொருளிடைச்சொல். "தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே." (தொல்,751) 'தஞ்சமெளியன்' மீமிசைச்சொல். எளியனாதல் எளிதாய் வெல்லப்படுதல்.
|