எண் குணத்தான் - எண்வகைப்பட்ட குணங்களையுடைய இறைவனின்; தாளை வணங்காத் தலை - திருவடிகளை வணங்காத தலைகள்; கோளில் பொறியின் - தத்தம் புலன்களைக் கொள்ளாத பொறிகளைப்போல; குணம் இல - பயன் படாதனவாம். எண் குணங்களாவன தன்வயத்தம், தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள், எல்லாம் வன்மை, வரம்பிலின்பம் என்பன. தாளை வணங்காத் தலையென்று தலையையே விதந்தோதினாரெனினும், வழுத்தாநாவும், புகழ்கேளாச் செவியும் அங்ஙனமே பயனில்லாதனவென்று கொள்க. குணமிலவே என்னும் பன்மை வினைகொண்டு முடிதலால், தலை என்பது பன்மை குறித்துவந்த பால் பகாவஃறிண்ணைப் பெயர். இறைவனுக்கு உடம்பில்லாவிடினும், அவன் என்றேனும் ஒருவடிவுகொள்ளின் அதன் அடியும் முடியும் ஒரு நிகரவாகவே தூய்மையாயிருப்பினும், அவனை வணங்கும் மக்களின் பணிவியலை மிகுத்துக்காட்டற்கே, திருவடி தொழுதல் அல்லது வணங்குதல் என்று கூறுவது மரபாகும். இறைவன் வழிபாட்டிற்குப் பயன்படுவதே மாந்தன் உடம்பின் தலையாய பயன் என்பது இக்குறட் கருத்து.
|