ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
தோற்ற நிலக்குப் பொறை.

 

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் - பிறரொடு போட்டியிட்டுப் பெரும்பொரு ளீட்டுவதையே பெருவிருப்பக் குறிக்கோளாகக் கொண்டு , அதன் பயனாகிய புகழை விரும்பாத ஆண் மக்களின் பிறப்பு; நிலக்குப் பொறை - இந்நிலவுலகிற்குச் சுமையாவதன்றி ஒரு பயனும் படுவதன்று.

"உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்."

(குறள் 232)

"ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
தூதியமில்லை யுயிர்க்கு."

(குறள். 231)

"வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
மெச்சம் பெறாஅ விடின்.

(குறள் 238)

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்."

(குறள் 239)

என்று முன்னரே கூறியுள்ளமையால் , 'நிலக்குப் பொறை' என்று அதை இங்கு நினைவுறுத்தினார். வெளியூரும் வெளிநாடுஞ் சென்று பெரும்பொருளீட்டுவது வணிகருள் ஆண்மக்கள் செயலாதலின் 'ஆடவர்' என்றார். வினையே ஆடவர்க் குயிரே (குறுந்.135) முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை.(தொல்.980). 'தோற்றம்' என்றது தோன்றிய வுடம்பை.'நிலக்கு' அத்துச்சாரியை தொக்கது.