சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து.

 

சீர் உடைச் செல்வர் சிறுதுனி - ஈகையாற் புகழ்பெற்ற செல்வர் குறுங்கால வறுமை யடைதல்; மாரி வறம் கூர்ந்த அனையது உடைத்து - உலகத்தை வழங்கிவரச் செய்வதாகிய முகில் (மேகம்) சிற்றிடைக்காலம் பெய்யாது வறட்சி மிகுந்தாற்போன்ற தன்மை யுடையது.

எல்லார்க்கும் இல்லையென்னாது வழங்கும் செல்வர் அதனால் வறுமையடைந்த பின்பும் , சிறிது காலம் பொறுத்து மீண்டுஞ் செல்வராகி முன்போற் பயன்படுவ ரென்பது உவமத்தாற் பெறப்பட்டது. இதனால், நன்றியில் செல்வம் இடையறாதிருந்தும் எக்காலும் பயன்படாதென்பதும் எதிர்மறை யளவையாற் பெறப்பட்டதாம். "இதற்குச் சீருடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை யுடைத்தென, அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும் ஓர் பொருட் டொடர்பு படாமலுரைப்பாருமுளர்." என்னும் பரிமேலழகர் மறுப்புரை மிகப் பொருத்தமானதே. துனி - வெறுப்பு; அதனை விளைத்தலால் வறுமை துனியெனப்பட்டது, முனியத்தக்க தாழ்வு முனிவு எனப்பட்டது போன்று (புறம்.192) இந்நான்கு குறளாலும் பயனில் செல்வத்தின் குற்றங் கூறப்பட்டது.