பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப
ரலகுடை நீழ லவர்

 

அலகு உடை நீழலவர்- நெல்லை விளைக்கும் ஈர நெஞ்சத்தாரான உழவர்; பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க்காண்பர்- பல வேற்றரசரின் குடை நிழலின்கீழுள்ள நாடுகளையும் தம் அரசன் குடைக்கீழ்க் கொண்டுவருவர்.

அரசனுக்கு ஆறிலொரு கடமை யிறுப்பதனாலும் போர்க் காலத்திற் படைமறவராகச் சென்று பொருது வெற்றி விளைத்தலாலும், பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர் என்றார்.

"வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல"
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.

(1581)

"வேந்துவிடு தொழிலின் படையுங் கண்ணியும்"
வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே,

(1582)

என்பன தொல்காப்பியம்.

"பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை
ஊன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே."


என்றார் வெள்ளைக்குடி நாகனார்.(புறம், 35)

இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் ,........


என்றார் இளங்கோவடிகள் (சிலப், 10;146-50). அலகு கதிர். அது இங்கு ஆகுபெயராய் நெல்லைக் குறித்தது. உடைய என்பது உடை எனக் குறைந்து நின்றது. 'நீழலவர்' என்றது இரப்போர்க் கெல்லாம் ஈயும் தண்ணளிபற்றி. 'குடை நீழல்' (நாடு) 'குடை' (ஆட்சி) என்பன ஆகுபெயர்கள். 'தங்குடை' என்றது ஒற்றுமையும் அன்பும் பற்றி, மணக்குடவரும் பரிப்பெருமாளரும் அலகுடை என்று பகுத்து, 'குடையில்லா' என்றும் 'குடையல்லாத' என்றும் முறையே பொருள் கூறுவர்.