தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

 

தொடிப்புழுதி கஃசா உணக்கின்- ஒரு நிலத்தை யுழுதவன் ஒருபலப் புழுதி காற்பலம் ஆகும் வண்ணம் அவ்வுழவடிப் புழுதியைக் காயவிடுவானாயின்; பிடித்து எருவும் வேண்டாது சாலப்படும் - அந்நிலத்திற் செய்த பயிர் கைப்பிடியெருவுந் தேவையின்றிச் செழித்து வளரும்.

பிடித்து ஒருபிடிக்குள் அடங்கியது. உம்மை இழிவு சிறப்பு. 'புழுதி' என்றமையால் உழுதபின் கட்டியடித்தலும் பரம்படித்தலும் பெறப்படும்.