ஏரினு நன்றா லெருவிடுதல் கட்டபி
னீரினு நன்றதன் காப்பு.

 

ஏரினும் எரு இடுதல் நன்று- பயிர் செய்யவேண்டிய நிலத்தை ஆழவுழுவதினும், அதற்கு வளமான உரமிடுதல் நல்லதாம்; கட்டபின்- அந்நிலத்தில் விதைத்து முளைத்து அல்லது நாற்று நட்டுப் பயிர் வளரும்போது முற்றுங் களையெடுத்தபின்; நீரினும் அதன் காப்பு நன்று- உரியநாள் முறைப்படி நீர் பாய்ச்சுவதினும், அப்பயிர் விளைந்து கதிரறுத்துப் போரடித்துக் கூலம் வீடு வந்து சேரும் வரை தக்க காவல் செய்தல் மிக நல்லதாம்.

'ஏர்' ஆகுபொருளது. காத்தல் பட்டிமாடு பறவைகள் திருடர் பகைவர் முதலியவற்றால் அழிவும் இழப்பும் நேராவாறு காவல் செய்தல். உழுதல், உரமிடுதல், களையெடுத்தல், நீர்பாய்ச்சுதல், காவல் செய்தல் ஆகிய முதன்மையான வினைகளை முறைப்படி குறிக்கும் போதே அவற்றை ஒப்புநோக்கிச் சிறந்தவற்றை விதந்து கூறினார். 'ஆல்' அசைநிலை.