இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

 

இன்மை-வறுமை; இற்பிறந்தார் கண்ணேயும்-தொன்று தொட்டுப் பண்பட்டு வந்த நற்குடியிற் பிறந்தவர் வாயிலும்; இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும்-இழிவுதரும் சொல்லைத் தோற்றுவித்தற் கேதுவான தளர்ச்சியை உண்டு பண்ணும் .

உயர்வு சிறப்பும்மை இளிவந்த சொல் பெரும்பாலும் பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் ஒருவரிடம் சென்று ஈயென இரத்தல். ’’ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.’’ (தொல்,928) ’’ஈயென இரத்தல் இழிந்தன்று’’ (புறம்,204) சோர்வு துன்பமிகுதி பற்றித் தம் பிறப்பை மறந்து இளிவந்த சொல் சொல்ல நினைக்கும் மனத்தளர்ச்சி.