நெருப்பினுட் டுஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது.

 

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்-ஒருவன் மந்திர மருந்துகளால் நெருப்பினுள் கிடந்து உறங்குதலும் கூடும்; நிரப்பினுள் யாது ஒன்றும் கண்பாடு அரிது-ஆயின், வறுமையிலிருந்து கொண்டு எவ்வகையிலுங் கண்மூடித் தூங்கவே முடியாது.

நெருப்பினும் வறுமை கொடிது என்றவாறு. இதுவும் அவன் துயரக் கூற்று. உம்மை யிரண்டனுள் முன்னது அருமை; பின்னது முற்று. இனி, ’யாதொன்றும்’ என்பது ஒரு சிறிதும் எனினுமாம். இவ்வும்மை இழிவு சிறப்பு. இத்தொண் (ஒன்பது) குறளாலும், வறுமையின் கொடுமை கூறப்பட்டது. ’நிரப்பு’ மேற் கூறியதே.