துப்புர வில்லார் துவரத் துறவாமை
யுப்பிற்குங் காடிக்குங் கூற்று.

 

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை-நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் அங்ஙனஞ் செய்யாதிருத்தல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று-பிறர் மனைகளிலுள்ள உப்பையும் புளித்த பழங்கஞ்சியையும் உண்டொழித்தற்கேயாம்.

நுகர்ச்சிப் பொருள் ஒன்றுமில்லாதவர் மானமுள்ளவராயின் செய்யத் தக்கது. உலகப்பற்றை முற்றத் துறத்தலே. ஏற்கெனவே உலகப் பொருளும் உறவினரும் இல்லாமையால், அவர் துறத்தற்கு எஞ்சி நிற்பது உடம்பொன்றே. ஆதலால், புறப்பற்றுத் தானாக நீங்கிய அவருக்கு அகப்பற்றை நீக்கும் துறவுநெறிச் செலவு எளிதாக இயலும். அதனால், இம்மையில் மானத்தைக் காத்தலொடு மறுமையிற் பெறற்கரிய வீடுபேறும் உண்டாம். அங்ஙனமிருந்தும், அதைச் செய்யாது பிறர் வீடுதொறும் சென்றிரந்து, வாயிற்கு வெளியே அவரிடம் பழங் கஞ்சியை நாய்போலருந்தித் திரிவது, எத்துணை மடமையும் மானக்கேடுமான செயலாம் என்று ஆசிரியர் இரங்கிக் கூறியவாறு. கூற்றுவன் உயிர்கவர்தலை உயிருண்ணல் (குறள்,326) என்னும் வழக்குண்மையின், பழங் கஞ்சியுண்ணும் இரப்போரை அதற்குக் கூற்று என்றார். முற்றத் துறவாமையாவது துப்பிரவில்லாமையின் ஒருவாற்றாற் றுறந்தாராயினார் பின்னவற்றை மனத்தாற் றுறவாமை. என்றுரைப்பது பொருந்தாது, துறவென்பது மனத்தால் துறத்தலேயாதலின்.