இன்பத்துப் பால்
களவியல்

அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்

அறவழியி லீட்டப்பெற்ற பொருளைக்கொண்டு இன்பந் துய்க்கும் வகையைப் பற்றிக் கூறும் பெரும்பகுதி இன்பத்துப்பாலாம். அது அகப்பொரு ளிலக்கணத்திற் சொல்லப்பட்ட 'மூன்றன் பகுதி' யின் (தொல்.அகத்,41) முடிவுநிலை பற்றியதாம்.அறம்பொருளின்பம்(வீடு) என்று கூறுவதே மரபாதலானும், இப்பொருட் பாகுபாடு தமிழர் கண்டதே யாதலானும், இப்பகுதிக்கு இன்பத்துப்பால் என்பதே ஆசிரியர் இட்டபெயராம்.

"அறம்பொரு லின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்நெரிந்து செப்பிய தேவை"

"வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றொன்றூழ் - கூடுபொரு
ளெள்ளி லெழுப திருபதிற் தைந்தின்பம்"

"இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூல்"

"அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய"

"அறந்தகளி யான்ற பொருடிரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு"

"அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
றிறனறிந்தேம் வீடு தெளிந்தேம்"


எனத் திருவள்ளுவமாலைச் செய்யுட்களுள் ஆறு இன்பம் அல்லது இன்பு என்றே குறித்தலையும், இரண்டே எதுகை நோக்கிக் காமம் என்னுஞ் சொல்லை ஆளுதலையுங் காண்க. பரிமேலழகர் காமம் என்னுஞ் சொல்லை ஆண்டதற்கு அவரது வடமொழி வெறியே கரணியம் என்பதையும் அறிக. ஆயினும், அச்சொல்லுந் தென்சொல்லே யென்பதை அவர் அறியார். காமம் ஆசையாகிய கரணியம்; இன்பம் விளையாகிய துய்ப்பு.

உலக இன்பங்களுள் தலை சிறந்ததும் ஐம்புல இன்பங்களையும் ஒருங்கே கொண்டதும் பெண்ணின்பமே. இவ்வின்பம் ஆடவர்க்குப் போன்றே பெண்டிர்க்கும் ஐம்புல வின்பந் தருவதால் இருபாற் பொதுவாம்.ஆயினும், ஆண்பாலின் வலிமை மேம்பாடும் உரிமைச் சிறப்பும் வலியத் துய்ப்பும் துய்ப்பாற்றலும் அடக்கக் குறைவும்பற்றி ஆண்பாலின்பமாகவே பொதுவாகக் கருதவுஞ் சொல்லவும்படும்.


களவியல்

மாந்தருள் இருபாலுங் கூடி இன்பந் துய்த்து அறஞ்செய்து ஒழுகும் இல்லற வாழ்க்கை, களவாகத் தொடங்குவதும் கற்பென்னும் வெளிப்படையாகத் தொடங்குவதும் என இருவகைப்படும். கூடி இன்பந்துய்க்கும் ஓர் இளைஞனும், ஓர் இளைஞையும் பிறர் இல்லாத இடத்தில் தற்செயலாகத் தலைக்கூடிக் காதலொருமித்துப் புணர்ந்து, பின்பு வெளிப்படையாகக் கூடி வாழத் தொடங்கும்வரை, குறித்த இடத்திற் சிறிது காலம் பெற்றோர்க்கும் மற்றோர்க்குந் தெரியாது நாள்தொறும் அல்லது அடிக்கடி மறைவாகக் கூடியொழுகும் ஒழுக்கம் களவாம்; அதன்பின் வெளிப்படையாகக் கூடிவாழும் வாழ்க்கை கற்பாம்.

ஆணும்பெண்ணும் பிறர்க்குத் தெரியாது மறைவாகக் கூடிப் புணர்தல் பலவகையில் நிகழுமேனும், மணமாகாத எதிர்ப்பா லினத்தையர் இருவர், தெய்வ ஏற்பாட்டின்படி தமியராக ஒருவரையொருவர் கண்டவுடன் காதலித்து மெய்ம்மறந்து புணர்ந்து, அன்றே நிலையான வாழ்க்கைத் துணையராவதும், அடுத்தோ சிறிதுகாலம் இடையிட்டோ கற்பாக மாறுவதும், அதற்குத் தடையேற்படின் இருவரும் உயிர் துறப்பதுமான உயரிய மறைவொழுக்கமே, தமிழ் நூல்களிற் களவெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவதாம். கனவென்பது மறைவு. களவாக வொழுகும் ஒழுக்கம் கனவெனப்பட்டது; ஆதலால் யாதொரு சமையத்து ஒரோவோரிணையரிடத்தன்றி, எவ்விடத்தும் எக்காலும் எல்லோரிடத்தும் நிகழ்வதன்று. ஆதலாற் கோவைப்பனுவல்களிலும் இத்திருக்குறளின் பத்துப் பாலிலும் களவுங் கற்பும் ஒரே தொடர்ச்சியாகக் கூறப்பட்டிருப்பது பற்றி, கற்பெல்லாங் களவொடு தொடங்குவனவாகக் கருதற்க.

மாந்தன் பெறக்கூடிய பேறுகள் என்னும் வகையில் எல்லாப் பொருள்களையும் அறம் பொருளின்பம் வீடென நான்காக வகுத்து, அவற்றை மீண்டும் உள்ளத்தொடு நெருக்கமுண்மையும் இன்மையும் பற்றி அகம் (இன்பம்) புறம் (அறமும் பொருளும் வீடும்) என இரண்டாகப் பகுத்து, அவ்விரண்டையும் எவ்வேழுதிணையாக விரித்து, அகத்திணைகளைத் தொகுத்து, அவ்வைந்திணையைக் களவு கற்பென இருவகைக் கைகோட்படுத்தி அவற்றைப் பல்வேறு பகுதிகளாகவும் பதிற்றுக்கணக்கான கிளவிக்கொத்துகளாகவும் நூற்றுக்கணக்கான துறைகளாகவும் பாகுபாடு செய்தும் கூறுபடுத்தியும், மேலையர் திங்களையுஞ் செவ்வாயையும் அடையும் இக்காலத்தும் ஏனைமொழியெதிலுமில்லாத பொருளிலக்கணத்தை, குமரிநாட்டுத் தலைக்கழகக் காலத்திலேயே தமிழ முனிவர் தமிழில் அறிவியல் முறையில் அமைத்திருக்கவும், இது (காமவின்பம்) புணர்ச்சி பிரிவென விருவகைப்படும். ஏனை இருத்தல் இரங்கல் ஊடலென்பன வோவெனின், இவர் பொருட்பாகுபாட்டினை அறம்பொருளின்பமென வடநூல் வழக்குப்பற்றி யோதுதலான், அவ்வாறே யவற்றைப் பிரிவின்கணடக்கினாரென்க. என்று பரிமேலழகர் வரைந்திருப்பது, எத்துணைப் பொய்யும் புரட்டுமான செய்தியாகும்! புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் ஐந்தும் ஒன்றனுளொன்று அடங்காத தனித்தனியுரிப்பொருளென்றும், அவற்றுள் ஊடலொழிந்த ஏனை நான்கும் இரு கைகோட்கும் பொதுவென்றும், அவர் அறிந்திலர் போலும்.

தமிழரின் இன்ப வாழ்க்கை தொன்றுதொட்டுக் களவு கற்பு என்றே பிரிக்கப் பட்டிருந்தமையை, திருக்குறட்கு ஐந்நூற்றாண்டுகட்கு முன்பே தோன்றிய தொல்காப்பியம் என்னும் சார்பு நூலில் உள்ள களவியல்கற்பியல் என்னும் ஈரியல்களைக் கண்டுதெளிக.

இக்களவியலை ஆசிரியர் ஏழதிகாரத்தாற் கூறத்தொடங்கி, முதற்கண் தகையணங் குறுத்துதல் கூறுகின்றார்.


அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்

அஃதாவது, மருத நிலத்தினின்று குறிஞ்சி நிலத்திற்கு வேட்டையாடச் சென்ற இளவரசனான தலைமகன், தன் பக்கத்துணைவரினின்றும் நீங்கித் தனியனாய் ஒரு மானைத் துரத்திச் சென்றவிடத்து அங்குச் சோலை விளையாட்டிற்குத் தன் தோழியர் கூட்டத்துடன் வந்து தற்செயலாய் அவரினின்று நீங்கித் தனித்து நின்ற, அம்மலை நாட்டரசன் மகளாகிய கன்னிகையைக் கண்டு, அவள் கழிபெருங் கட்டழகு தன்னைத் துன்புறுத்தலைச் சொல்லுதல். இது கண்டவுடன் நிகழ்தலால், இத்துறை இப்பெயர் பெற்றது. இதிற் காட்சி ஐயம், தெளிதல் என்னும் மூன்றும் அடங்கும். குறிப்பறிதலுங் கருதப்பெறும். ஆதலால், இது ஆசிரியரே அமைத்துக்கொண்ட கலவைத் துறையாம்.

உலகிற் காமவின்பத்தை உயர்ந்த அளவில் நுகர்தற்கு, அவ்வவ்விடத்தில் ஒப்புயர்வற்ற பதவியும் மாபெருஞ்செல்வமுங் கழிபெருங்கட்டழகும் வேண்டியிருத்தலின், இலக்கண நூலார் கிழவன், வேள், மன்னன், கோ, வேந்தன், என்று ஏறுவரிசையில் ஐவகைப்பட்ட அரசவகுப்பாருள் ஒருவனையும் ஒருத்தியையுமே காதலனும் காதலியுமாகக் கொண்டிருக்கின்றனர். இது கிழவன் கிழத்தி, தலைவன் தலைவி, தலைமகன் தலைமகள் என்று காதலரைக் குறித்தலாலும்; ஊர, (குறும்பொறை) நாட, வெற்ப, துறைவ, தோன்றல் என்று தலைவனை விளித்தலாலும்; காதலர் தேரும் யானையும் குதிரையும் ஊர்வதாகச் சொல்லப்படுவதாலும், அறியப்படும். இங்ஙனம் உயர்ந்தோரையே காதலராகக் கொண்டாலும், உலகியற்கொத்த உண்மைத்தன்மையும் ஊட்டுவதற்குத் தாழ்ந்தோரக்குரிய செய்திகளும் இடையிடை விரவிக் கூறப்படும். இது,

"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்".

எனப்படும்(தொல்.அகத்.53)
இனி,காதல காதலியர் இருவரும் குடியுங் குணமும் உருவுந் திருவும் அன்பும் அறிவும் ஒத்திருப்பதும், இன்பச் சிறப்பிற்கும் நீடிப்பிற்கும் வேண்டப்படும். ஆயினும், காதலனுக்குப் பதினாறாட்டைப்பருவமும் காதலிக்குப் பன்னீராட்டைப்பருவமுமாக, அகவையில் மட்டும் ஒவ்வாமை கொள்வர். உருவுங் குணமும் அன்புமொழிந்த மற்றவகைகளிலும் காதலன் உயர்ந்தவனாயிருக்கலாம். இவையும் புலனெறி வழக்கம்.

"ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே"

(தொல்.கள.2)

"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே".

(தொல்.மெய்ப்.25)

 

அணங்கொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு.

 

[தலைமகளுருவு முதலியன முன் கண்டறிந்தவற்றினுஞ் சிறந்தமையின், அவளைத் தலைமகன் ஐயுற்றுக் கூறியது]

கனங்குழை- இங்குத் தோன்றும் கண்ணியம் மிக்க காதணியுடையாள்; அணங்குகொல்- இச்சோலையில் வதியும் தெய்வமகளோ ஆய்மயில்கொல்-அன்றேல், இறைவன் ஆய்ந்து படைத்த ஒரு சிறப்பான மயில் வகையோ; மாதர்கொல் - அன்றேல் அழகிற் சிறந்த ஒரு மாந்தப் பெண் தானோ; என்நெஞ்சு மாலும் - என் மனம் இவளை இன்னளென்று அறியாது மயங்குகின்றது.

இலக்கண நூலார் புலனெறி வழக்கப்படி பல செய்திகளைக் கூறினாலும், அகப்பொருளியலிற் கூறிய காதலர் வாழ்வு உண்மையானதும் உலகியற் கொத்ததுமே யாகும். ஒரு காலத்து ஓரிடத்து ஒரிணையர் மாட்டு நிகழ்ந்த உயரிய வாழ்க்கையை, அளவைப் படுத்தியதேயன்றி வேறன்று. ஆதலால்,"பிணிமூப் பிறப்புகளின்றி எஞ்ஞான்று மொரு தன்மையராய்.....புணர்ந்து வருவது." என்று பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது. சேரசோழ பாண்டியர் போலும் ஓர் அரசக் குடும்பத்திற் பிறந்து நாகரிகமாகவும் மேனத்தாகவும் வளர்ந்து, இயற்கையழகொடு செயற்கையழகும் நிரம்பிப் பொன்மை கலந்த வெண்ணிறம் மின்னும் ஒரு கன்னிகையை, இயற்கை வளம் பொலிந்த ஒரு கண்கவர் கவின் காவில் மகிழ்ச்சி நிலையிற் கண்டபோது, 'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ' என்று ஓர் இளவரசனும் வியந்தது என் வியப்பாம்?

அணங்குதல் வருத்துதல், அணங்கு வருத்துந் தெய்வப்பெண். குறிஞ்சி நிலத்தில் நிற்றலும் அழகால் தன்னை வருத்துதலும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் சோலையில் நிற்றலும் பற்றி 'ஆய்மயில்கொல்' என்றும்,

"வண்டே இழையே வள்ளி பூவே
கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்
றன்னவை பிறவும் ஆங்கவண் நிகழ
நின்றவை களையுங் கருவி யென்ப."


என்றவாறு (தொல்.கள.5) வண்டு மூசுதல், அணிகல னணிந் திருத்தல், தோளில் தொய்யிற்கொடி யெழுதப்பட்டிருத்தல்,மாலை வாடுதல், கண்ணிமைத்தல், கால்நிலந்தோய்தல், ஆடையசைதல், முதலியவற்றால் 'மாதர் கொல்' என்றும், கூறினான். 'கொல்' மூவிடத்தும் ஐயம்.'ஓ' அசை நிலை. கணங்குழை யென்பது காலிங்கர் கொண்ட பாடம். 'கனங்குழை' அன்மொழித்தொகை.கணங்குழை யென்று பாடமோதிப் பலவாய்த் திரண்ட குழையென்றுரைப்பாரு முளர். என்றார் பரிமேலழகர். பாம்படம், தண்டொட்டி, அரிசித்தழுப்பு, பூச்சிக்கூடு, ஆகிய பாண்டி நாட்டுக் காதணிகளைக் குறிப்பின், அப்பாடமும் பொருந்துவதே. மாது-மாதர்.'அர்' மேலீறு, இனி வருமிடத்தும் இச்சொற்கு இங்ஙனமே உரைக்க.