கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.

 

இதுவுமது

கொடும்புருவம் கோடா மறைப்பின் - அருகிலுள்ள வளைந்த புருவங்கள் நேராக விருந்து மறைக்குமாயின்; இவள் கண் நடுங்க அஞர்செய்யல - இவள் கண்கள் நான் நடுங்குதற்கேதுவான துன்பத்தைச் செய்யமாட்டா.

இயல்பாகக் கொடிய புருவங்கள் தம் நேர்மையில்லாத் தன்மையால், தமக்கருகிலுள்ள கண்கள் எனக்குக் கடுத்துன்பஞ் செய்வதைத் தடுக்காதுபோயின, என்பதுபடநின்றமையின், 'மன்' ஒழியிசைப்பொருளது 'புருவம்'; 'கண்' பால்பகாவஃறிணைப் பெயர்கள்.