கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.

 

(அவள் முலைகளினாலான வருத்தங் கூறியது.)

மாதர் படாமுலைமேல் துகில் - இப் பெண்ணின் சரியாத முலைகளின்மேல் - அமைந்த கச்சு; கடாக் களிற்றின்மேற் கண்படாம் - மதயானையின்மேல் இருமத்தகங்களையும் மறைக்குமாறு போர்த்த முகபடாத்தையொக்கும்.

முலைக்கச்சு மதயானையின் முகபடாத்தையொப்பது, தோற்றப்பொலிவும் அஞ்சத்தக்கதும் எல்லாரும் தொடமுடியாததுமான இடத்திருப்பதும் பற்றியாம். மாந்தருள் பாகன் தவிர வேறொருவரும் முகபடாத்தைத் தொடமுடியாததுபோல, ஆடவருட் காதலன் தவிர வேறொருவரும் முலைக்கச்சைத் தொடமுடியாமை நோக்குக. இருமுலைபோல் இருமத்தகமிருப்பின் உவமைக்குத் துணையாம்.ஆடவர் கைபடாக் கன்னி முலையாதலின், அதன் விடைப்புங் கட்டமைப்புந் தோன்றப் 'படாஅமுலை' என்றார்.'கடாஅ' , 'படாஅ' இசைநிறையளபெடைகள்.மாதர் என்னுஞ் சொற்கு முன்னுரைத்தாங் குரைக்க (குறள்.1081). முலைக்கச்சை நாணுடை மகளிர் மார்பை மறைத்த துகில் என்று, மார்யாப்புச் சேலையாகப் பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது.