ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினு
ணண்ணாரு முட்குமென் பீடு.

 

(அவள் நெற்றியினாலான வருத்தங் கூறியது)

ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு-போர்க்களத்திற்கு வந்து என் வலிமையை அறியாத பகைவரும் வந்தறிந்தார் வாய்க்கேட்டு அஞ்சுதற்கேதுவான என் பெருவலிமை; ஒள்நுதற்கு ஓ உடைந்ததே-இப்பெண்ணின் ஒளிபொருந்திய சிறு நெற்றியொன்றிற்கே ஐயோ! அழிந்துவிட்டதே!

பெண் என்பது அதிகாரத்தால் வந்தது. பீடு என்பது பெருமை பேர் முதலியவற்றையுந் தழுவும். 'ஓ' கழிவிரக்கம் பற்றிவந்தது. 'ஓஒ' இசைநிறையளபெடை, உம்மை எச்சம், ஏகாரம் தேற்றம், "பெருமையும் உரனும் ஆடூஉமேன" (தொல். கள. 7) என்று கூறிக்கொள்ளும் பெருமையெல்லாம் பெண்ணிடத்துச் செல்லா தென்று, காமத்தின் இயல்பு கூறியவாறு.

"கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும்
பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே
தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றா
ளாம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே"


என்னுந் திருக்கோவைச்செய்யுள் (21) ஈங்குக் கவனிக்கத்தக்கதாம்.