வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்.

 

[தலைமகன் பாங்கியிற் கூட்டத் திறுதிக்கண் சொல்லியது,]

தோடு ஆர் கதுப்பினாள் தோள்- அழகிய இதழுள்ள பூவையணிந்த கூந்தலியாகிய இவள் தோள்கள்; வேட்ட பொழுதின் அவை அவை போலுமே- விரும்பிய போதெல்லாம் ஆசைப்பட்ட அரும்பொருள்கள் தாமே வந்து சேர்ந்து இன்பஞ்செய்தாற்போல, நான் வேண்டிய போதெல்லாம் எனக்கு எளிதாகக் கிடைத்து இன்பஞ் செய்தன.

பாங்கியிற் கூட்டமாவது, முந்தின முந்நாளும்போல் நாலாம் நாள் தலைமகள் தனித்திராது தோழிமாரொடு கூடியிருந்ததினால், தலைமைத் தோழியைக் துணைக்கொண்டு தலைமகன் தலைமகளைக் குறித்த இடத்திற் கூடியது. இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம், ஆகிய நால்வகைக் கூட்டங்களாலும் , தலைமகன் தொடர்ந்து இன்பம் பெற்றமையால் 'வேட்டபொழுதி னவையவை போலுமே' யென்றான். 'தோடு' ஆகுபெயர். ஏகாரம் தேற்றம். 'தோள்' இடக்கரடக்கல். உவமை இன்பஞ்செய்தல் பற்றியதாதலின் வினையுவமை.