அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

 

(பகற்குறிக்கட் பூவணிகண்டு சொல்லியது)

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் - இவள் தன் இடை மென்மையை நோக்காது அனிச்சப்பூவைக் காம்பு கிள்ளாமல் தன் தலைக்கணிந்தாள் ; நுசுப்பிற்கு நல்ல பறை படா - ஆகலால் , இனி இவளிடைக்கு மங்கலப் பறைகள் முழங்கா , அமங்கலப் பறைகளே முழங்கும் .

அக் காம்பின் கனத்தைக் தாங்கமாட்டாமல் இவள் கொடியிடை ஒடியும் ; ஒடிந்தாற் சாவுநேரும் ; அன்று அமங்கலப்பறை தான் முழங்கும் , சாவு இடை முறிவால் நேர்வதால் , சாப்பறை முழக்கம் இடையை நோக்கியதாகச் சொல்லப்பட்டது , இடை யொடுக்கத்தை மிகுத்துக் காட்டியதால் இஃது உயர்வு நவிற்சியணி ' படாஅ ' இசை நிறையளபெடை , ' பறை ' பால்பகா வஃறிணைப் பெயர் . பகற்குறியாவது பாங்கியிற் கூட்டக் கால்த்திற் பகல் வேளையில் தலைமகனுந் தலைமகளுங் கூடுதற்குக் குறித்த இடம் .