அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத
ரடிக்கு நெருஞ்சிப் பழம் .

 

( உடன் போக்குரைத்த தோழிக்கு அதனருமை கூறிமறுத்தது . )

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - அறிஞரால் மென்மைக்குச் சிறந்ததாகக் கொள்ளப்பெற்ற அனிச்சமலரும் ஒதி மத்தின் நொய்ய துய்முடியும் கூட ; மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் - என் காதலியின் மெல்லிய உள்ளங்கால்களை முற்றிய நெருஞ்சி முட்போற் குத்தித் துன்புறுத்துமே .

இத்தகைய மென் பாதத்தினள் கூர்ம் பருக்கைக் கற்களும் நீள்வேல் முள்ளும் நெடுகலும் பரவிக்கிடக்கும் வெஞ்சுரத்தை எங்ஙனங் கடப்பாள் ? ஆதலால் அக்கருத்தை விட்டுவிடு என்பது குறிப்பு . இது உடன்போக்கு மறுத்தலாயினும் , தலைமகளின் அடிநலத்தை யெடுத்துக் கூறுதலால் , இதுவும் நலம் புனைந்துரைத்தலேயாம் , பெருநெருஞ்சி முதிர்ந்த நிலையில் நெல்லிக் கனிபோலப் பசுமஞ்சள் நிறங்கொள்ளுமாதலின் ' பழம் ' என்றார் . இக்குறளிலுள்ள அணி உயர்வுநவிற்சி .