தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
மாலை யுழக்குந் துயர் .

 

(இவ்வாற்றாமையும் மடலேறுங் கருத்தும் நுமக்கெவ்வாறு வந்தன என்ற தோழிக்குச் சொல்லியது .)

மாலை உழக்கும் துயர் மடலொடு - நான் மாலை வேளையிற் படுங்காமத் துயரினையும் அதற்கு மருந்தாகிய மடலேற்றம் பற்றிய எண்ணத்தையும் ; தொடலைக் குறுந் தொடி தந்தாள் - மாலை போல் கையை வளைந்த சிறு வளையல்களையுடைய உன் தலைவி தந்தாள் .

காமநோய் ஏனைவேளைகளிலு முளதேனும் மாலைக் காலத்திலேயே மிகுதியாகத் தாக்குவதால் , ' மாலையுழக்குந் துயர் ' என்றும் , அந்நோயின் முதிர்ச்சி பற்றியே மடலேற்றத் துணிவும் வந்ததனால் ' மடலொடு ' என்றும் , நோயைத் தணிக்கும் ஆற்றலுள்ளவளாயிருந்தும் அதைத் தானாகச் செய்யத்தக்க பருவமும் உரிமையும் இல்லாத இளமையள் என்பது தோன்ற ' தொடலைக் குறுந்தொடி ' என்றும் , கூறினான் . அவள் நின் பொறுப்பிலும் ஆட்சியிலும் உள்ளமையால் , நீயே என் துயரை நீக்கவேண்டுமென்பது கருத்து . ' குறுந்தொடி ' அன்மொழித் தொகை .