தக்கார் தகவில ரென்ப தவரவ
ரெச்சத்தாற் காண்ப படும்.

 

தக்கார் தகவு இல்லர் என்பது-இவர் நேர்மை யுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உண்மை; அவரவர் எச்சத்தால் காணப்படும்-அவரவருடைய மக்களால் அறியப்படும்.

தக்கார்க்கு நன்மக்களும் தகவிலார்க்குப் புன்மக்களும் பிறத்தல் இயல்பாதலின் , 'அவரவர் எச்சத்தாற் காணப்படும்' என்றார். எச்சம் என்னும் சொல் , மக்களின் வாழ்க்கை மட்டுமன்றிப் பெற்றோரின் முகத்தோற்றமும் குணவமைதியும் எஞ்சி நிற்பதைக் குறிக்கும் . அதனால் , மக்கள் என்னுஞ் சொல்லினும் தகுதியும் பொருட்பொலிவு முடையதாம் .

'யோக்கியர்' என்னும் வடசொல் வழக்கூன்றியதால் , தக்கார் என்னும் தமிழ்சொல் வழக்கற்றதென அறிக .