நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல்
சினைப்பது போன்று கெடும்.

 

(தலைமகனை நினைந்து வருந்துகின்ற தலைமகள் தோழிக்குச் சொல்லியது.)

தும்மல் சினைப்பது போன்று கெடும்-எனக்குத் தும்மல் எழுவது போன்று தோன்றி அடங்கி விடுகின்றது; நினைப்பவர் போன்று நினையார் கொல் - ஆதலால், காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாது விட்டுவிடுகின்றார் போலும்!

வேற்றிடத்திலுள்ள அன்புகெழுமிய உறவினரால் நினைக்கப்பட்டவர்க்குத் தும்மலெழு மென்பது, பொதுவான உலகியற் கொள்கை. கணவன் மனைவியரினுஞ் சிறந்த வுறவின்மையால் , வினை பற்றிப் பிரிந்து வேற்று நாடுசென்ற கணவன் தன் மனைவியை நினைப்பது இயல்பே. ஆயின், இடைவிடாது வினை கெடுமாதலின், வினை முடிந்த பின்னரே மனைவியை நினைத்து மீளுவதாகக் கூறுவது புலனெறி வழக்கம். அதற்கேற்ப, தலைமகள் தனக்குத் தும்மல் தோன்றி யடங்கியதினின்று, தலைமகன் மேற்கொண்ட வினை முடிவது போன்று தோன்றி முடியாமையை யுணர்ந்தாளாகக் கொள்ளப்பெறும். சினைத்தல் - அரும்புதல். 'கொல்' ஐயம்.