தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொ
லெந்நெஞ்சத் தோவா வரல்.

 

(இதுவுமது)

தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய உள்ளத்தின் கண் எம்மைச் செல்லவிடாது அதைக் காவல் செய்துகொண்ட காதலர் ; எம் நெஞ்சத்து ஓவாவரல் நாணார் கொல் - தாம் மட்டும் எம்முடைய உள்ளத்தின்கண் இடைவிடாது வருவதற்கு நாணாரோ?

ஒருவரைத் தம்மிடத்திற்கு ஒருபோதும் வரவிடாது தடுத்து விட்டுத் தாம் மட்டும் அவரிடத்திற்கு ஓயாது செல்லுதல், நாணுடையார் செயலன்மையின் 'நாணார்கொல்' என்றாள். 'கடி' காவலுணர்த்தும் உரிச்சொல்; இனி, விலக்குப் பொருளது எனினுமாம். 'கொல்' ஐயம்.