பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

 

(இதுவுமது)

துணை நீங்கித் தொல் கவின் வாடிய தோள்- தம் துணைவர் நீங்கியதனால் அவராற்பெற்ற செயற்கை யழகேயன்றிப் பழைய இயற்கை யழகு மிழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும்- தம் பருமை குன்றியதனாற் பசும்பொன் வளையல்கள் கழலச் செய்யும்.

'சோரும்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. முதலொடு சினைக்குள்ள ஒற்றுமைபற்றித் 'துணை நீங்கி' என்றாள். அன்று அவர் பிரிந்தாரென்று அவரது அன்பின்மையை உணர்த்தின; இன்று அவர் குறித்த பருவத்து வந்திலரென்று அவரது பொய்ம்மையை உணர்த்துகின்றன. இங்ஙனம் அவர் மேற் குறைகூறுதற்கு அவரே இடந்தந்துள்ளார் என்பதாம்.