எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

 

பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - செருக்கின்றியடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து - ஆயினும், அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மையதாகும்.

எல்லாராலும் மதிக்கப்படும் இயல்பும், எண்ணியதைச் செய்து முடிக்குந் திறனும், ஒட்டோலக்கமாக (ஆடம்பரமாக) வாழ்ந்தின்புறும் உயர்வும், இடம்பொருளேவலால் வரம்பிறந் தொழுகத் தூண்டும் நிலைமையும், உடைய செல்வரின் வாழ்க்கை அடக்கமுடைமைக்குப் பெரிதும் ஏற்காததாயிருப்பதால், அவரிடத்து அவ்வறம் அமைவது அவர்க்கு மற்றொரு செல்வப்பேறாம் என்றார். செல்வந் தகைத்து என்பது இன்னோசை பற்றி மெலிந்து நின்றது.