ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து.

 

ஆமைபோல் - ஆமையானது, தனக்குத் தீங்கு நேராவாறு, தன் ஓருடம்பிற்குள் தன் தலையும் நாற்காலுமாகிய ஐந்துறுப்புக்களையும் அடக்கிக் கொள்ளுதல் போல; ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - இல்லறத்தானும் ஒரு பிறப்பில் தன் ஐம்பொறிகளையும் தீவினை நேராதவாறு அடக்க வல்லனாயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ்வல்லமை அவனுக்கு எழு பிறப்பளவும் அரணாதலை யுடையது.

ஒருமை, ஐந்து, எழுமை என்பன தொகைக் குறிப்பு. இவற்றுள் ஒருமை எழுமை என்பன எண்ணாயிருக்கும் நிலைமை குறியாது எண்ணையே குறித்து நின்றன. எழுபிறப்புஎன்பதற்கு 62 ஆம் குறளுரையில் தந்த விளக்கத்தையே இங்குங் கொள்க.