கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து .

 

கற்றுக் கதம் காத்து அடங்கல் ஆற்றுவான் செவ்வி - அறநூல்களைக் கற்றறிந்து சினம் வராமற் காத்து அடங்கி யொழுக வல்லவனின் செவ்விய மனநிலையை ; அறம் ஆற்றின் நுழைந்து பார்க்கும் - அறத்தெய்வம் அவனைத் தலைக்கூடுமாறு அவனையடையும் வழிச்சென்று நுணுகி நோக்கும் .

செவ்வியாவது ஒருவரைக் கண்டுரையாடுதற் கேற்ற இனிய மனநிலை . செவ்வையான நிலை செவ்வி . அறத்தெய்வம் அவனைக் கண்டு பாராட்டி மகிழ்தற்குச் சமயம் பார்க்கும் என்றது , அந்த அளவிற்கு அவன் அடக்கமுடைமையிற் சிறந்தவன் என்பதை உணர்த்தற்கு. " நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை " (தொல் . 857)