துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயு மற்று.

 

(இதுவுமது)

துனியும் புலவியும் இல்லாயின்-முதிர்ந்த சடைவாகிய துனியும் அளவான சடைவாகிய புலவியும் இல்லாவிடின் ; காமம் கனியும் கருக்காயும் அற்று-காம வின்பம் முறையே நன்றாகப் பழுத்த பழமும் பழுக்காத கன்னற் காயும் போல்வதாம் .

காம வின்பம் ஊடல் , புலவி , துனி என்னும் மூவகைச் சடைவு நிலையிலும் முறையே கன்னற்காய் , பழம், அளியல் என்னும மூவகைப் பதங் கொள்ளும் பழுக்காத கன்னற்காய்ப் பதமும் மிகப் பழுத்த அளியற் பதமும் சுவை யின்றி வலுத்தும் சுவை கெட்டு அளிந்தும் இருக்குமாதலின் ,இடை நின்ற கனிப் பதமே மென்மையும் இனிமையுங் கொண்டு இன்பந் தருவதாம் . ஆதலால் , அளவாக வுப்பமைந்தது போன்ற புலவி நிலையே இனிதான கனி போல் இன்பந் தருவதற் கேற்ற தென்பதாம் .