மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் .

 

பார்ப்பான் ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் - ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும் ; பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் - ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு , தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும் .

ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்கவரம்பிருக்கும் . பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்க வில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று ; அவன் தமிழ வொழுக்கத்தைக் கடைப்பிடித்தானா இல்லையா என்பதே அதன் ஆய்விற்குரியதாம் . ஆகவே , அவ்வொழுக்கத்தினாலேயே அவன் உயர்குலத்தானாவான் என்பதும் , அது கெட்டவிடத்துத் தாழ்ந்த குலத்தானாகிவிடுவான் என்பதும் , தமிழறநூல் முடிபாம் .