ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

 

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் - தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை யின்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் -ஆனால், அத்தீங்கைப் பொறுத்தார்க்கோ உலகம் அழியும்வரையும் புகழுண்டாம்.

'ஒருநாளை யின்பம்' சரிக்குச் சரி செய்தேம் என்னும் பொந்திகை (திருப்தி). புகழ் உலகமுள்ள காலமெல்லாம் தொடருமாதலால் , பொன்றுதல் இங்கு உலகத்தின் தொழில்.