அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 17. அழுக்காறாமை

அஃதாவது, பிறராக்கங் கண்டு பொறாமைப் படாமை. பொறாமை என்பது பொறுத்தலின் மறுதலையாதலால், அதை விலக்குதற்கு இவ்வதிகாரம் பொறையுடைமையின் பின் வைக்கப்பட்டது.

அழுங்குதல் வருந்துதல் அல்லது துன்புறுதல். அழுங்குவது அழுக்கு. அது உறு என்னும் துணைவினை பெற்று அழுக்குறு எனநிற்கும். அழுக்குறுதல் பிறராக்கங் கண்டு பொறாது வருந்துதல். நாசமுறு என்னும் வினை நாசமறு என்று உலக வழக்கில் திரிந்தாற்போன்று, அழுக்குறு என்பதும் அழுக்கறு என இலக்கிய வழக்கில் திரிந்தது. "அழுக்கற் றகன்றாருமில்லை" (170) என வள்ளுவரே கூறுதல் காண்க. நாசமுற்றுப் போவான் என்பது நாசமற்றுப் போவான் என்றே வழங்குதல் காண்க.

அழுக்கறு என்னும் கூட்டுவினை அழுக்காறு என நீண்டு தொழிற் பெயராகும். அது முதனிலை திரிந்த தொழிற்பெயர். அழுக்காறு கடும் பொறாமை. அழுக்கறாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் அழுக்காறாமை என நீண்டு வழங்குகின்றது. இது வராமை தராமை என்பன வாராமை தாராமை என நீண்டது போன்றது.

 

ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு.

 

ஒருவன் தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு-ஒருவன் தன் நெஞ்சத்திற் பொறாமை யில்லாத தன்மையை; ஓழுக்காறாக்கொள்க-தனக்குரிய ஓழுக்க நெறியாகக்கொள்க.

இயல்பு இயல்பான தன்மை ஒழுக்காறாக் கொள்ளுதல் உயிரினுஞ் சிறப்பாகப் பேணிக் காத்தல்.