அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

 

அற்றார் அழிபசி தீர்த்தல்-வறியவரின் கடும்பசியைத் தீர்க்க; அஃது ஒருவன் பொருள் வைப்புழி பெற்றான்-அவ்வறச் செயலால் ஒருவன் தான் தேடிய செல்வத்தை மறுமையில் தனக்குப் பயன்படுமாறு சேமித்து வைக்கும் ஏம வைப்பகத்தைப் (Savings Bank) பெற்றானாவன்.

கொல்வது போல வருத்துவதனாலும், குடிப்பிறப்பு கல்வி மானம் அறிவுடைமை முதலிய பேறுகளையும் பண்புகளையும் அழிப்பதனாலும், கடும்பசி அழிபசி யெனப்பட்டது. வறியவரின் பசியைத் தீர்த்தற்குச் செலவிட்ட பொருள் பின்பு தனக்கே வந்துதவுதலால் அருள் நோக்கிச் செய்யாவிடினும் தனக்குப் பயன்படும் அறம் நோக்கியேனும் அதைச்செய்க என்றவாறு.

'தீர்த்தல்' தல்லீற்று வியங்கோள். பெற்றான் என்பது தேற்றம் பற்றிய காலவழுவமைதி. அஃதொருவன் என்பது அதுவொருவன் என்றும் இருக்கலாம். அடுத்த அதிகார முதற் குறளில் 'வாழ்தலதுவல்லது' என வருதல் காண்க.