இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.

 

இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டின் துன்பவின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து; ஈண்டு அறம்பூண்டார் பெருமை - பிறப்பறுத்தற்கு இப்பிறப்பில் துறவறம் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் விளங்கித் தோன்றிற்று.

படைகொண்டு பொருது பார்முழுதும் வென்றவரினும், ஐம்புலனையடக்கி ஆசையை வென்றவரே பெரியர் என்பது. பிரிநிலையேகாரம் செய்யுளில் தொக்கது.