உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

 

உரன் என்னும் தோட்டியான் - அறிவு என்னும் துறட்டியினால், ஓரைந்தும் காப்பான் - பொறிகளாகிய யானைகள் ஐந்தையும் தன்தன் புலன்மேற் செல்லாது அடக்குபவன்; வரன் என்னும் வைப்பிற்கு - எல்லா நிலங்களுள்ளும் மேலான வீட்டு நிலத்திற்போய் முளைத்தற்குரிய; ஓர் வித்து - ஒரு விளைந்த மணி விதை போல்வான்.

உரனைத் துறட்டியாக உருவகித்துப் பொறிகளை யானைகளாக உருவகியாதது ஒருமருங்குருவகம். துறடு - துறட்டி - தோட்டி.

புரம் = மேல், மேன்மாடம். புரம் - பரம் = மேல், மேலிடம், மேலுலகம். பரம் - வரம் = மேன்மை. வரம் - வரன் (கடைப்போலி) = மேலுலகம், வீட்டுலகம்.

இனி, வைப்பு என்பதற்குச் சேர்த்து வைக்கும் இடம் என்று பொருள்கொண்டு, வீட்டுலமாகிய களஞ்சியத்திற் சேர்த்துவைக்கப் பெறும் விளைந்த மணிபோல்வான் என்று உரைக்கினும் பொருந்தும்.