அல்ல லருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி.

 

அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருள் பூண்டவர்க்கு இம்மையிலும் ஒரு துன்பமுமில்லை; வளி வழங்கும் மல்லல் மா ஞாலம் கரி - இதற்குக் காற்று இயங்குகின்ற வளமுள்ள பெரிய மாநிலத்திலுள்ள மக்களெல்லாரும் சான்றாளராவர்.

அருளுடையார் துன்பப் பட்டதை ஒருவரும் கண்டறியாமையின், எல்லாருஞ் சான்றாளராவர் என்றார். ஞாலத்தார் சான்றாளரெனவே, இம்மையி லென்பது பெறப்பட்டது. 'ஞாலம்' இடவாகுபெயர். ஞாலத்தின் மேற்பரப்பிற் காற்று வழங்காத இடமேயின்மையால், ஞாலம் முழுவதையுங் குறிக்க 'வளி வழங்கும்' என்னும் அடை கொடுத்தார் என்று கொள்ளலாம்.

இனி, அனந்தநாத நயினார் சமணச்சார்பாக இக் குறட்குக் கூறும் உரை வருமாறு :-

அருளாள்வார்க்கு - அருளையுடையவருக்கு, அல்லல் - துன்பம், இல்லை - எப்போதுமில்லை, (அதற்கு) வளி - (கனோகதி, கனவாத, தனுவாத மென்னும் மூன்று) மகா காற்றுக்களால் சூழப்பெற்று, மல்லல் - வலிபொருந்தி, வழங்கும் - நிலை பெற்றிருக்கும், மா - பெரிய, ஞாலம் - உலகம், கரி - சாக்ஷி என்பதாம்.

"இதன் கருத்து: வலிபொருந்திய மூன்று மகா காற்றுகளின் ஆதாரங்களால் நிலை பெற்றிருக்கும் உலகத்திற்கு அபாய மில்லாதது போல, அருளை ஆளுகின்றவருக்கு யாதொரு துன்பமில்லை என்பதாம்;" - திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும், பக். 43 - 4.

"வளிமிகின் வலியு மில்லை" (புறம். 51) என்று ஐயூர் முடவனார் பாடியிருப்பதனால், சமணச் சார்பின்றியும் இத்தகையவுரை கூறலாமென அறிக.