அறத்துப் பால்
துறவறவியல்

அதிகாரம் 26. புலான் மறுத்தல்

அஃதாவது, அருளுடைமைக்கு மாறானதும் முரட்டுக் குணத்தை உண்டாக்குவதுமான ஊனுணவைத் தவிர்த்தல். ஊனுணவு உயிர்க்கொலையால் வருவதாலும் கொலைவினை துறவறத்திற்கு மாறான தாதலாலும் கொலையைத் தவிர்க்கக் கூடிய குணம் அருளுடைமையேயாதலாலும், இது அதன்பின் வைக்கப்பட்டது.

 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்.

 

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண் பான்-தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன்; எங்ஙனம் அருள் ஆளும்-எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன்.

உடம்பைப் பருக்க வைத்தற்குக் கொலையில்லாத வுணவு நிரம்ப விருத்தலானும், உடம்பை எங்ஙனம் பேணினும் அது அழிந்து போவதாதலாலும், ஊனுணவு பெறுதற்கு ஓர் உயிரியை எள்ளளவும் இரக்கமின்றிக் கொல்ல வேண்டியிருத்தலானும், குற்றமற்றவுயிரிகளை மேன்மேலுங் கொல்வது கொடுமையினுங் கொடுமையாதலானும், 'எங்ஙனம் ஆளும் அருள்' என்றார். ஆளவே ஆளான் என்பது விடை. உயிருள்ளது உயிரி (பிராணி)